கொசுக்களை ஒழிக்க கொசுவே சிறந்த மருந்து! சிங்கப்பூர் விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு!

கொசுக்களை ஒழிக்க கொசுவே சிறந்த மருந்து! சிங்கப்பூர் விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு!

உலகம் முழுவதுமே இப்போது ஒரே பொதுப் பிரச்சினையாகத் திகழ்ந்து வருவது கொசுத்தொல்லை தான். கொசுக்களை ஒழிக்க உலகெங்கும் பல்வேறு விதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையிலும் அவற்றை முற்றாக ஒழிக்க முடியாமல் திணறும் நிலை தான் அனைத்து இடங்களிலும் நீடித்து வருகிறது.

இந்நிலையில் கொசுக்களை ஒழிக்கும் நடவடிக்கையாக சிங்கப்பூர் விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள புதிய வழிமுறை ஒன்று சற்று நிம்மதி அளிப்பதாக உள்ளது.

சிங்கப்பூர் விஞ்ஞானிகள் நோய் பரப்பும் தன்மையைக் கட்டுப்படுத்தும் ‘உல்பேச்சியா’ எனும் பாக்டீரியாவை சாதாரண ஏ டி எஸ் கொசுக்களில் புகுத்தி அந்தக் கொசுக்களை மற்ற சாதாரண கொசுக்கள் இருக்கும் பகுதிகளில் திறந்து விடுவதன் மூலம் அவற்றின் பாதிப்புகளைக் குறைக்கும் நவீன ஆராய்ச்சி ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

இந்த ஆராய்ச்சியில் கொசுக்கள் வளரத் தோதான ஈரப்பதமான இடம், வெப்பநிலை, வெளிச்சம் அனைத்தும் ஒரு அறையில் செயற்கையாக உருவாக்கப்படுகிறது. பிறகு அங்கு நீர் நிலைகளில் வளரக்கூடிய சாதாரண கொசுக்களின் முட்டைகளைச் சேகரித்து அந்த இடங்களில் வளர விடுகிறார்கள்.

அப்படி வளரும் போது அந்தக் கொசுக்கள் இருக்கும் பகுதிகளில் உல்பேச்சியா பாக்டீரியாவை செலுத்தி கொசுக்களின் உடலில் அவற்றைக் கலக்க விடுகிறார்கள்.

குறிப்பாக ஆண் கொசுக்களுக்கு உல்பேச்சியா பாக்டீரியா பாதிப்பு செயற்கையாக ஏற்படுத்தப்படுகிறது.

இப்படி உல்பேச்சியா பாதிப்பு கொண்ட ஆண் கொசுக்களுடன் இனப்பெருக்கம் செய்யும் ஏ டி எஸ் பெண் கொசுக்கள் பொரிக்காத முட்டைகளை இடும் என்கிறார்கள்.

இதனால் மலேரியா, டெங்கு பரப்பும் ஏ டி எஸ் கொசுக்களின் இனப்பெருக்கம் குறைகிறது.

இந்த வகை பாக்டீரியாக்களுக்கு நோயைப் பரப்பும் பாக்டீரியாவின் தன்மையைக் குறைக்கும் சக்தி உண்டு. இவை பெரும்பாலும் பட்டாம் பூச்சிகளில் பொதுவாகக் காணப்படக் கூடியவை என்கிறார்கள்.

உல்பேச்சியா பாக்டீரியாக்களின் தாக்கம் இளம் கொசுக்களிலும் உண்டு. எனவே இத்தகைய உல்பேச்சியா பாக்டீரியா பாதிப்பு கொண்ட கொசுக்களின் எண்ணிக்கை பெருகப் பெருக பின்னாட்களில் படிப்படியாக கொசுத்தொல்லை குறைந்து ஒரு கட்டத்தில் அவை கணிசமாக அழிந்து விடும் என சிங்கப்பூர் விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com