டெல்லி, சாஸ்திரி பார்க் பகுதியில் ஒரு வீட்டில் கொசு அதிகமாக இருந்ததால் அவர்கள் தினமும் கொசுவர்த்தியை ஏற்றி வைத்துவிட்டு தூங்குவது வழக்கம். அது போல்தான் நேற்று இரவும் அவர்கள் கொசு விரட்டியை ஏற்றி வைத்துவிட்டு தூங்கச் சென்றனர். இன்று காலை நீண்ட நேரமாகியும் அந்த வீட்டில் இருந்து யாரும் வெளியே வராததால் அருகில் இருந்த மற்றவர்கள் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். அதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் அந்த வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றனர்.
வீட்டின் உள்ளே அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர்கள் பிணமாகக் கிடந்ததைக் கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். மேலும், வீட்டின் உள்ளே நுழைந்ததும் போலீசாருக்கும் லேசாக மூச்சத் திணறி உள்ளது. உடனே அந்த வீட்டின் ஜன்னல்களை அவர்கள் திறந்த விட்டு உள்ளனர். அதையடுத்து, பிணமாகக் கிடந்த ஆறு பேரின் சடலங்களையும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆறு பேரின் மரணம் குறித்து போலீசார் அந்த வீட்டை சோதனை செய்தபோது, அந்த வீட்டில் கொசுவர்த்தி எரிந்த துகள்கள் அதிகமாக இருந்ததைக் கண்டுள்ளனர். மேலும், அந்த வீட்டில் கொசு அதிகமாக இருந்ததால் அன்று அவர்கள் வழக்கத்துக்கு அதிகமான கொசுவர்த்திகளை ஏற்றி வைத்துவிட்டு தூங்கி இருப்பதும் கண்டறியப்பட்டு உள்ளது. அதிகமான கொசுவர்த்திகள் எரிந்ததால் கார்பன் மோனாக்சைடு என்ற நச்சு அந்த வீடு முழுவதும் பரவி, அவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவர்களின் மரணம் நிகழ்ந்திருக்கலாம் என்று போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் பலியான சோக சம்பவம் அந்தப் பகுதியையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.