
பெங்களூருவில் நாகவரா பகுதியில் மெட்ரோ ரயில் திட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பணியின் போது இரும்பு கம்பிகளால் அமைக்கப்பட்டுவரும் தூண் சரிந்து விழுந்ததில், அந்த வழியாக பைக்கில் சென்ற தாய் மகன் உயிரிழந்துள்ள நிலையில், இச்சம்பவம் அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.
மெட்ரோ ரயில் மேம்பாலத்துக்காக தூண்கள் அமைக்கும் பணிகள் பெங்களூருவின் நாகவரா பகுதியில் நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து கல்யாண் நகரில் இருந்து எச்.ஆர்.பி.ஆர். பகுதி வழித்தடத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலத்துக்காக இரும்பு கம்பிகளால் ஆன தூண்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நாகவரா பகுதியில் இன்று காலை 11 மணி அளவில் திடீரென மெட்ரோ ரயில் பாதைக்காக அமைக்கப்பட்டு வரும் இரும்பு தூண் ஒன்று, பணியின் போது இடிந்து சரிந்து சாலையில் சென்று கொண்டிருந்த பைக்கின் மீது விழுந்து பெரும் விபத்துக்குள்ளானது.
இந்நிலையில், அந்த பைக்கில் சென்ற கணவன், மனைவி மற்றும் இரு பிள்ளைகளுக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்ட நிலையில் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் தாயும், அவரது 2 வயது மகனும் உயிரிழந்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து அந்த சாலையில் கடும் போக்குவரத்து ஏற்பட்ட நிலையில் அங்கு இடிபாடுகளை அகற்றும் பணிகள் தீவிரமாக நடந்துவருகின்றது. இந்நிலையில், இச்சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.