மகள் திருமணத்தன்று கிரைண்டர் விபத்தில் அம்மா மரணம்! அதிர வைத்த உண்மைச் சம்பவம்!

மகள் திருமணத்தன்று கிரைண்டர் விபத்தில் அம்மா மரணம்! அதிர வைத்த உண்மைச் சம்பவம்!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கீழப்பெருவிளைப் பகுதியைச் சேர்ந்தவர் 51 வயது சாந்தி. இவருக்கு மூன்று பெண் மக்கள். அவர்களில் மூத்த மகளான பொன் பிரிதீஷாவுக்குத் திருமணம். அதற்காக வீடு முழுவதும் உறவினர்கள் நிரம்பி இருந்தனர். வந்திருந்த உறவினர்களுக்கு உணவு தயாரிக்கும் வேலையில் சாந்தி ஈடுபட்டிருந்தார். அதற்காகக் கிரைண்டரில் மாவு அரைத்துக் கொண்டிருக்கும் போது அதில் மின்கசிவு ஏற்பட்டு தூக்கி எறியப்பட்டார் சாந்தி. திருமண வீட்டில் எதிர்பாராமல் நடந்த இந்த விபத்தில் அனைவருமே திடுக்கிட்டுப் போனார்கள். மின்சாரம் தாக்கி தூக்கி எறியப்பட்ட சாந்தியை உடனடியாக மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்ற போதே அவர் சுயநினைவை இழந்திருந்தார் என்கிறார்கள். அங்கு மருத்துவமனைக்குச் சென்ற பின்னரோ, சாந்தி உயிரிழந்து விட்டார் என்ற தகவலே கிடைத்திருக்கிறது. மரணத் தகவல் கிடைத்ததும் திருமண வீடு அதிர்ச்சியில் உறைந்தது.

ஆனாலும், இத்தனை செலவு செய்து மெனக்கெட்டுத் திருமண ஏற்பாடுகள் செய்த பிறகு அதை எப்படி நிறுத்துவது? என்று இரு வீட்டுப் பெரியவர்களும் மன உளைச்சலில் தவித்திருக்கின்றனர். இறந்த சாந்தியின் உடலை பிரேதப் பரிசோதனையின் பின் ஆசரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் வைத்து விட்டு இங்கே ஒருவழியாக திட்டமிட்டபடி திருமண விழாவை நடத்துவது என முடிவெடுத்து அதன் படியே திருமணத்தை நடத்தியிருக்கிறார்கள்.

மணமகளின் துயரத்தை தான் என்னவென்று சொல்ல? அங்கே தாயார் மரணமடைந்து விட்டார். இங்கே திருமணம் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு பெண்ணுக்கு வாழ்வில் சந்தோஷமான தருணங்களில் ஒன்று என்று திருமணத்தச் சொல்வார்கள். திருமணத்திற்குப் பின் அந்தப் பெண் கடந்து செல்ல வேண்டியதான மிக நெடிதானதொரு பயணத்தில் வளைகாப்பு, குழந்தைப் பேறு, குழந்தைகளை வளர்த்தல் என எத்தனையோ விஷயங்களில் அவளுக்குத் தன் தாயாரின் உதவியும், ஒத்தாசைகளும் மிக மிகத் தேவையானதாக இருக்கும். எல்லாவற்றையும் தாண்டி அன்பு, அரவணைப்பு என்றொரு மிகப்பெரிய விஷயம் இருக்கிறதே! அதை அம்மாவைத் தவிர வேறு யாரால் பூரணமாகத் தர முடியும்?

இதையெல்லாம் அந்த மணப்பெண்ணால் எண்ணாமல் இருக்க முடியுமா?

அது அந்தப் பெண்ணின் முகத்தில் நன்றாகவே பிரதிபலித்தது. மிக மிக மகிழ்ச்சியான தருணங்களில் ஒன்றாக ஆகியிருக்க வேண்டிய அந்தத் திருமண நாள் கைங்கர்யங்கள் அத்தனையுமே பிரதீஷாவுக்கு மிக மிகத் துக்ககரமான நினைவுகளைத் தருபவையாக மாறி இருந்தன. மணப்பெண் மிகவும் சோகமாக இருந்தார். அந்த மணவிழாவில் கலந்து கொண்டிருந்த உறவினர்களுமே சோகத்திற்கு ஆட்பட்டவர்களாகவே தோன்றினர்.

மகளின் திருமண நாளன்று அம்மா இறந்து போவதின் கொடுமையை அங்கிருந்த அனைவருமே உணர்ந்திருந்ததாகவே தோன்றியது.

வந்திருந்த உறவினர்கள் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்து அந்த மணவிழாவில் கலந்துகொண்டிருந்தனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதி மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com