ஆசிட் ஊற்றி மருமகளின் முகத்தை சிதைத்த மாமியார். காரணம் என்ன?

ஆசிட் ஊற்றி மருமகளின் முகத்தை சிதைத்த மாமியார். காரணம் என்ன?

திமுக-வின் விருதாச்சலம் நகர துணைச் செயலாளர் ஆண்டாள், தனது மருமகள் மீது ஆசிட் வீசியும், கொசு மருந்தை வாயில் ஊற்றியும் கொலை செய்ய முயன்றுள்ளார். இவர் தனது சொந்த அண்ணன் மகளான தனது மருமகளையே கொல்ல முயன்றது ஏன்? 

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் செல்லியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் 55 வயது ஆண்டாள். இவருக்கு முகேஷ் ராஜ் என்ற மகன் உள்ளார். மகனுக்கு தன்னுடைய அண்ணன் ஆழ்வார் என்பவருடைய மகளான கிருத்திகாவை கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வைத்துள்ளார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். 

முகேஷ் ராஜ் அவிநாசியில் வேலை செய்து வரும் நிலையில், விடுமுறை நாட்களில் மட்டும் ஊருக்கு வந்து செல்வார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு இரவு வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த கிருத்திகா மீது, மாமியார் ஆண்டாள் கழிவறையை சுத்தப்படுத்த பயன்படும் ஆசிட்டை எடுத்து வந்து முகத்தில் ஊற்றியுள்ளார். 

இதில் எரிச்சல் தாங்க முடியாமல் அவர் கண் விழித்தபோது, கண் காது உட்பட உடலில் பல இடங்களிலும் உற்றியுள்ளார். இதில் அலறித் துடித்த கிருத்திகா மீது ஏறி அமர்ந்து, கொசு மருந்தை வாயில் ஊற்றி கொலை செய்ய முயன்றுள்ளார். வலியால் கிருத்திகா கதறித் துடிக்கும் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர், தீயணைப்புத் துறைக்கும் காவல்துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பாதிக்கப்பட்ட கிருத்திகாவை மீட்டு விருதாச்சலம் அரசு மருத்துவமனைக்கு முதலுதவி செய்ய அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

கண்ணில் ஆசிட் பட்டதால் கிருத்திகாவின் வலது கண் பார்வை பறிபோனது. இதனால் தற்போது புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து விருத்தாச்சலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, ஆண்டாள் மற்றும் அவரது மகன் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

முதற்கட்ட விசாரணையில், தனது அண்ணன் மகளான கிருத்திகாவை தனது மகனுக்கு திருமணம் செய்து வைத்த ஆண்டாள் முகேஷ் அவிநாசிக்கு வேலைக்கு சென்றபோது, தனியாக இருந்த மருமகளிடம் அக்கம் பக்கம் உள்ளவர்களிடம் பேசக்கூடாது, போனில் பேசக்கூடாது, குறிப்பாக ஆண்கள் யாரிடமும் பேசக்கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகளை மாமியார் விதித்ததாகத் தெரிகிறது. 

மேலும் மருமகள் மீது சந்தேகப்பட்டு அவ்வப்போது அவரை திட்டியும் வந்துள்ளார். இந்நிலையில் சந்தேகம் முற்றிப்போகவே, அழகாக இருப்பதால்தானே மற்றவர்களுடன் பேசுகிறாய் எனக் கூறி, கிருத்திகாவின் முக அழகை சிதைக்க, மாமியார் ஆண்டாள் முயன்றது விசாரணையில் தெரிந்துள்ளது. இதற்கு ஆண்டாளின் மகனான கிருத்திகாவின் கணவரும் உடந்தை எனத் தெரிகிறது. எனவே மருமகளை ஆசிட் வீசி கொல்ல முயன்ற மாமியார் மற்றும் உடந்தையாக இருந்ததாக கைது செய்யப்பட்டுள்ள கணவரிடம், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடத்தையில் சந்தேகப்பட்டு சொந்த அண்ணன் மகளான, மருமகளை இத்தலைய கொடூர முறையில் கொலை செய்யும் அளவுக்கு மாமியார் சென்ற சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com