தாய்மொழியே செம்மொழி!

உலகத் தாய்மொழி தினம் – பிப்ரவரி 21
தாய்மொழியே செம்மொழி!

ண்ணில் பிறந்த ஒவ்வொரு மனிதருக்கும் தனித்துவ அடையாளம் தருவதாக அமைகிறது அவர் பிறந்த மண்ணைச் சார்ந்த அவரவரின் தாய்மொழி. மனிதராகிய உணர்வுகளையும் எண்ணங்களையும் வெளிப்படுத்த உதவியாக ஆதிகாலத்தில் வாழ்ந்த முன்னோர்களால் அந்தந்தப் பகுதி சார்ந்த பேச்சு வழக்குகளின் அடிப்படையில் உருவானதுதான் தாய்மொழி. ஒரு குழந்தை பிறந்ததும் காதால் கேட்டு கற்றுக்கொள்ளும் முதல் மொழி அதன் தாயின் தாலாட்டில் கேட்கும் தாய்மொழியைத்தான்.

ஆகவேதான் தாய்மொழி கல்வி குறித்த முக்கியத் துவத்தை வரும் தலைமுறையினர் அறிந்துகொள்ளவும் மாறி வரும் காலத்துக்கேற்ப பிற மொழிகளைக் கற்றலுடன்  தாய்மொழி  மீதும் அழியாப்பற்றுடன் அதனை அழிய விடாமல் மேலும் செம்மைப்படுத்தி பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21ஆம் தேதி உலகத் தாய்மொழி தினமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது .

ஒரு மனிதர்  பிறந்தது முதல் மறையும் வரை மனதில் உள்ளவற்றைப் பிறரிடம் பகிர்வதற்கும், சிந்திப்பதற்கும், எழுதுவதற்கும் அடிப்படையாக இருப்பதே தாய்மொழி. இதுவே, மனிதனுக்கான அடையாளத்தையும் வழங்குகிறது. இந்த நாகரீக உலகில் வாழ்வதற்கும் கற்பதற்கும் பணியாற்றவும் தேவைப்படும் மொழிகள் எத்தனை இருந்தாலும் ஒருவருக்குத் தன்னுடைய தாய்மொழி என்பதுதான் மிகவும் உயர்வானது. தனது தாய்மொழியில் கற்பதும் தாய்மொழி பேசுவதும் மிகச்சிறந்த உணர்வைக் கொடுப்பதாக உள்ளது. காரணம்
பிறந்த மண்ணின் மீதான நேசத்தின் அடிப்படையில் மொழி என்பது  இது உணர்ச்சியின் உருவமாகக் கருதப் படுகிறது.

ஒவ்வொரு நாட்டின் மொழியின் சப்தங்கள் வேண்டுமானால் மாறுபட்டு இருக்கலாம். ஆனால், அதன் வழியாக வரும் மனிதர்களின் உணர்வுகள் எங்கும் ஒன்றுதான். உலகமெங்கும் ஆயிரக்கணக்கான மொழிகள் இருந்தாலும் மண் தோன்றாக் காலத்தில் தோன்றிய பெருமைமிகு நம் தமிழ்மொழியின் சிறப்பு தனிதான். 2500 ஆண்டுகள் பழைமையான தமிழ் மொழியின் தொன்மைத்தன்மையை கருத்தில்கொண்டு இது செம்மொழியாக அறிவிக்கப்பட்டுள்ளதே இதன் சிறப்புக்குச் சான்று.

நமது நாடான இந்தியா பல மொழி கலாசாரங்கள் நிறைந்த நாடாகும். இந்தியாவில் வரையறுக்கப்பட்ட பிரிவில் 123 மொழிகளும் வரையறை செய்யப்படாத பிரிவில் 147 மொழிகளும் உள்ளன. அவற்றில் பழைமையான மொழிகளில் நமது தாய்மொழியாகிய தமிழ் மொழியும் ஒன்றாகும். இதனைப் போற்றிப் பாதுகாக்க வேண்டியது தமிழர் ஆகிய நம் ஒவ்வொருவரின்  கடமையாகும். திருவள்ளுவர், ஔவையார்,  கம்பர், சேக்கிழார், பாரதியார், பாரதிதாசன் என அன்று தொடங்கி இன்று வரை தமிழ் மீது அதிகப் பற்றுகொண்ட படைப்பாளிகள் பலர் தங்களது அரிய தமிழ் படைப்புகளால் தாய்மொழி பற்றிய விழிப்புணர்வை இந்தச் சமூகத்துக்குத் தந்த வண்ணம் உள்ளனர்.

மிழில் உள்ள இலக்கியப் படைப்புகளையும், மொழியின் ஒப்பற்ற அழகியலையும் கண்டு வியந்த உலகில் உள்ள பிறமொழி எழுத்தாளர்கள் தமிழில் உள்ள பல படைப் புகளைத் தங்களது மொழியில் மொழி பெயர்த்துள்ளனர். தமிழின் மொழியியல், கலாசார பன்முகத்தன்மை மற்றும் பன்மொழி வழக்கு ஆகியவை குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். ஒருவர் தனது தாய் மொழியில் கல்வி கற்கும்போது  அவர்களின் சிந்தனைத் திறன் மேம்படும் என்பதை நாம் புரிந்துகொண்டு நம் குழந்தைகளுக்குத் தாய்மொழிக் கல்வியின் அவசியத்தை உணர்த்த வேண்டும். உலகில் உள்ள பல நாடுகள் தனது நாட்டில் தாய்மொழி மூலமாகவே கல்வியினை வழங்குகின்றன என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தாய்மொழியின் மீதான பற்று ஒவ்வொருவருக்கும் மிகவும் அவசியமாகும். நமது உரிமையான தாய்மொழிக்கு உரிய மரியாதை தந்து, அதைப் போற்றிப் பாதுகாக்கும் கடமை நம்முடையது. வீட்டில் குடும்பத்தினருடன் உரையாடும் போது பிறமொழிக் கலப்பின்றி தாய்மொழியில் உரையாடி மகிழவேண்டும். நம் மொழியில் உள்ள சிறந்தப் படைப்புகளைப் பிள்ளைகளுக்குத் தந்து வாசிக்க வைக்க வேண்டும், வாசித்துக் காட்ட வேண்டும். நம் வாரிசுகளை தாய்மொழியை விருப்பப்பாடமாகத் தேர்ந்தெடுக்கச் செய்து, மொழியின் மீதான அவர்களின் பற்றுதலை வளர்க்க வேண்டும்.

ஆகவே, ஒவ்வொருவரும் அவரவரின் தாய்மொழி மீதான விழிப்புணர்வைப் பெற்று மொழியைப் பேண வேண்டியதுதான் நாம் தாய்மொழிக்குத் தரும் நன்றியாகும்.

வாழ்க தமிழ்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com