
சென்னையில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் அதேவேளையில், விதிமீறல் சம்பவங்களும் அதைவிட அதிகமாகவே நடந்து கொண்டு தான் இருக்கிறது. சாலை விபத்துகளை தவிர்க்கும் பொருட்டு போக்குவரத்து சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு, போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் மீது போலீசார் அதிகளவு அபராதமும் விதித்து வருகின்றனர்.
அந்த வகையில் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல் மற்றும் பந்தயம் மற்றும் அதிக வேகத்தில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது ரூ.5,000ம், மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் ரூ.10,000ம் மற்றும் சிக்னலை மீறுதல், ஹெல்மெட் அணியாமல் செல்வது உள்ளிட்ட புதிய போக்குவரத்து விதிகளின் படி அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, சென்னையில் முக்கிய சாலைகளில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியும், விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளை தீவிரமான கண்காணித்து அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு வாகன ஓட்டிகள் மீது விதிக்கப்படும் அபராத தொகையை அவர்கள் ஆண்டுக்கணக்கில் செலுத்தாமல் விட்டுவிடுகின்றனர்.
இதனால் ஆண்டுக்கணக்கான செலுத்தப்படாத வாகன ஓட்டிகள் மீது விதிக்கப்பட்ட போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகை இதுவரை ரூ.300 கோடி வரை நிலுவை உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த நிலுவைத் தொகையை வசூல் செய்யும் பொருட்டு, சென்னை மாநகரக் காவல்துறை காப்பீட்டு நிறுவனங்களுடன் கைகோர்த்து புதிய வழிமுறையை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.
இனிமேல் நீங்கள் உங்கள் வாகனத்திற்கு இன்சூரன்ஸ் புதுப்பிக்கும் போது உங்கள் வாகனத்தின் மீதான அபராதம் நிலுவையில் இருந்தால் இன்சூரன்ஸை புதுப்பிக்க முடியாது என்ற புதிய நடைமுறையை சென்னை மாநகரக் காவல்துறை தற்போது கொண்டு வந்துள்ளது.
அதாவது, உங்கள் வாகனத்திற்கான இன்சூரன்ஸை புதுப்பிக்க இன்சூரன்ஸ் நிறுவனத்தின் ஆன்லைன் பக்கத்திற்கு சென்று, உங்கள் வாகன பதிவு எண்ணை உள்ளீடு செய்யும் போது சம்பந்தப்பட்ட வாகனத்தின் மீது அபராத தொகை செலுத்தப்படாமல் நிலுவையில் இருந்தால், அந்த தொகைய செலுத்தினால் மட்டுமே, இனிமேல் வாகனத்திற்கான இன்சூரன்ஸை புதுப்பிக்க முடியும் என்று அறிவுறுத்தப்படும். அதேபோல் நீங்கள் நேரடியாக சென்றாலும் இதேநிலை தான் உங்களுக்கு ஏற்படும். இதனால் நீங்கள் உங்கள் வாகனத்திற்கான இன்சூரன்ஸை ஆன்லைன் மூலம் புதுப்பிக்க முயன்றாலும் சரி, அல்லது நேரடியாக சென்று புதுப்பிக்க நினைத்தாலும் சரி அபராதத் தொகையை செலுத்தினால் மட்டுமே இனி இன்சூரன்ஸை புதுப்பிக்க முடியும் என்ற புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.
அதனால் வாகன ஓட்டிகளே உங்கள் வாகனத்தின் மீது அபராத தொகை ஏதாவது இருந்தால் உடனே அதை கட்டிடுங்க. இல்லையென்றால் உங்களுடைய இன்சூரன்ஸை புதுப்பிக்க முடியாது.