வெப்பம் தணிக்கும் தென்னங்கீற்று மட்டைகளுக்கு மவுசு!

வெப்பம் தணிக்கும் தென்னங்கீற்று மட்டைகளுக்கு மவுசு!

கிராமங்களில் இருக்கும் பாட்டி வீடுகளின் முன் பக்கம், தென்னங்கீற்றுகளால் வேயப்பட்ட பந்தலின் கீழ் தோட்டத்தில் இருக்கும் உயர்ந்த தென்னை மரங்களின் இளநிகளைக் குடித்து கோடை விடுமுறையைக் கழித்தவர்களைக் கேட்டால் தெரியும் தென்னங்கீற்றின் மகிமை.

  ஆம். நம்மை வாட்டி வதைக்கும் வெயிலின் வெப்பத்திலிருந்து தப்பிக்க பல வழிகளை கடைப்பிடிக்கிறோம். தர்பூசணி முலாம்பழம் எலுமிச்சை நுங்கு வெள்ளரிப்பழம் போன்ற பழங்களையும் உடலுக்கு உகந்த களி, கூழ், மோர் போன்ற உணவுகளையும் உண்டு உடல் வெப்பத்தைத் தணிக்கிறோம். ஆனால் வீடுகளில் தாக்கும் வெப்பத்துக்கு கவசமாக செயற்கை குளிருட்டியான ஏசியை பயன்படுத்துகிறோம். அதிகமாக ஏசியைப் பயன்படுத்தும்போது உடல் நலப் பாதிப்புகளும் ஏற்படுகிறது என்கின்றனர். சரி இதற்கு மாற்று வழி என்ன? நம் முன்னோர்கள் பயன்படுத்திய இயற்கை வழியான தென்னங்கீற்று மட்டைகள்தான் என்கின்றனர் சேலம் வாசிகள்.

கொளுத்தும் கோடையின்  தாக்கத்தை சமாளிக்க மக்கள் பல்வேறு முறைகளைக் கையாண்டு வருகின்றனர். இதில் வெப்பம் தணிக்கும் இயற்கை வழியான தென்னங்கீற்று மட்டைகளுக்கு மவுசு அதிகரித்துள்ளது. இதனால் நலிந்து வரும் குடிசைத் தொழிலுக்கு புத்துயிர் கிடைத்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர் தென்னங்கீற்று முடையும் தொழிலில் இருப்பவர்கள்.

கோடை, குளிர், மழை எனும் இயற்கையின் ஒவ்வொரு காலகட்டத்திலும் இயற்கை தரும் அற்புதங்களையும் நாம் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துகிறது. உதாரணமாக நம்மையெல்லாம் அச்சத்தின் உச்சிக்குக் கொண்டு சென்ற கொரானா எனும் பெருந்தொற்றுக் காலத்தில் அதிலிருந்து தப்பிக்க நம் சமையலறைகளிலும் உணவுகளிலும் நாம் அதுவரை பயன்படுத்ததாத அரிய மூலிகைகள் இடம்பிடித்தன. இதே போல்தான் நம்மை வாட்டி வதைக்கும் கோடைகாலமும் இயற்கை சார்ந்த பொருள்களுடன் நாம்  வாழ வேண்டும் என்று உணர்த்தியுள்ளது.

        தமிழகத்தில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சூரியனின் வெப்பம் உச்சத்தில் இருக்கும் காலகட்டமாகும். அதிலும் தற்போது அக்னி நட்சத்திர அனலில் நோகப்போகும் காலம்.  ஏப்ரல் மாதத்தில் இருந்து பெரும்பாலான மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது. பகல் 12 மணியிலிருந்து மதியம் 3 மணி வரை தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுக்கும் அளவுக்கு கோடை பாதிப்புகள் உள்ளன. இப்படி கொளுத்தும் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க மக்கள் பல்வேறு யுத்திகளை கையாண்டு வந்தாலும் சமீபகாலமாக தென்னை சார்ந்த பொருட்கள் மீது மக்களின் கவனம் அதிகளவில் திரும்பியுள்ளது எனலாம்.

இளநீர் மட்டுமின்றி குருத்து நார் மற்றும் தென்னங் கீற்றுகளை விரும்பி வாங்குகின்றனர். இது குறித்து சேலம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள தென்னங்கீற்று வியாபாரிகள் கூறியதாவது. “பொதுவாக தென்னை மரத்தின் அத்தனை பாகங்களும் மனிதர்களுக்கு குளிர்ச்சி ஏற்படுத்தும் தன்மை கொண்டது. தென்னங்கீற்று வெயில் காலத்தில் குளிர்ச்சி தருவதோடு மழைக்காலங்களிலும் தட்பவெப்பத்தை நடுநிலைப்படுத்தும் தன்மை கொண்டது. கிராமங்களில் பெண்குழந்தைகள் பூப்பெய்தினால் தாய்மாமன் தென்னங்கீற்றுகளால் பின்னப்பட்ட தட்டிகள் கொண்டு குடிசை கட்டுவது ஒரு சம்பிரதாயமாகவே உள்ளது காரணம் அதன் குளிர்ச்சி.

திருமண விழாக்கள் துவங்கி  சடங்கு விருந்து நிகழ்ச்சி என மனிதர்களின் ஒவ்வொரு நிகழ்விலும் இடம் பிடிக்கும் பெருமைக்குரியது தென்னங்கீற்றுகள். தற்போதைய கோடையின் தாக்கம் மீண்டும் பல இடங்களில் மட்டைகளை பின்ன வைத்துள்ளது எனலாம். பெரும்பாலான மக்கள் தற்போது வீடுகளில் தென்னங்கீற்றுகளை வேய்ந்து வருகின்றனர். வீடுகள் மட்டுமின்றி புறவழிச் சாலைகளில் எங்கும் தொழிற்சாலை குடோன்கள் பட்டறைகள் போன்றவைகளில் அதிக அளவில் தகர கொட்டகைகள் அமைக்கப்பட்டடு அதிலிருந்து வெப்பம் அதிகமாக வெளிப்படுகிறது. இதைத் தவிர்க்க  தகரகொட்டகை களின் மீது தென்னங்கீற்று தட்டிகளை வேய்ந்து பயன்படுத்தி வருகின்றனர்.

    அதேபோல் ஓட்டு வீடு முதல் கான்கிரீட் கட்டிடம் வரை தென்னங்கீற்று மட்டையை பயன்படுத்தி வருகின்றனர். கச்சிதமாக வேயப்பட்ட தென்னங்கீற்றுகளை மேல் மாடியில் தளம் முழுவதுமோ அல்லது குறிப்பிட்ட இடங்களிலோ பரப்பி வைக்கலாம். இதனால் வெப்பம் பரவுவது தடுக்கப்படும். வீட்டின் மேல் மாடியில் கோடைக்காலம் முடியும் வரை மட்டுமல்லாது நிரந்தரமாகவும்  பந்தல் போட்டு வைக்கலாம். ஓட்டு வீடுகளின் முன்பு தென்னங்கீற்று மட்டையால் பந்தல் போட்டு கான்கிரீட் வீடுகளில் மாடியில் பந்தல் போட்டும் வெப்பத்தை தனித்து வருகின்றனர் இதற்காக நகரம் கிராமம் என்று பாகுபாடு இல்லாமல் பொதுமக்கள் தென்னங்கீற்றுகளை ஆர்வத்துடன் அதிக அளவில் வாங்கி செல்கின்றனர். இதனால் நலிந்து கிடந்த குடிசைத் தொழிலுக்கு புத்துயிர் கிடைத்துள்ளது. மக்களின் தேவைக்கேற்ற  விலையில் தென்னங்கீற்று மட்டைகள் பின்னி விற்பனை  செய்யப்படுகின்றன. இதற்கு அரசு சலுகைகளை வழங்கினால் மேலும் உற்சாகம் ஊட்டுவதாக அமையும்”.

   ஆம். செயற்கைகளை விடுத்து இயற்கையை நாடினால் நலம் பெறுவது நாமும் நம் சந்ததிகளும்தானே. அரசு இவர்களைப் போன்ற குடிசைத்தொழில் செய்வோருக்கு தகுந்த சலுகைகள் தந்தால் அவர்களும் நன்மை பெறுவார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com