கலை, அறிவியல் மற்றும் விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சாதனை படைத்தவர்களை கௌரவிக்கும் வகையில் அவர்களுக்கு இந்திய ஜனாதிபதி மூலம் ராஜ்ய சபா நியமன எம்.பி. பதவி வழங்குவது மரபாக இருந்து வருகிறது. அந்த வரிசையில் இசையமைப்பாளர் இளைராஜா, தடகள வீராங்கனை பி.டி.உஷா, தர்மசாலா கோயில் நிர்வாக அறங்காவலர் வீரேந்திர ஹெக்டே, பிரபல திரைக்கதை எழுத்தாளர் வி.விஜயேந்திர பிரசாத் ஆகியோருக்கு சமீபத்தில் ராஜ்ய சபா எம்.பி. பதவி வழங்கப்பட்டது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் இவர்களுக்கான பதவியேற்பு விழா நடைபெற்றபோது, ராஜ்ய சபா தலைவர் வெங்கையா நாயுடு, இளையராஜா பெயரைச் சொல்லி அழைத்தபோது அவையில் கூடியிருந்த அனைவரும் கைத்தட்டத் தொடங்கினர். ஆனால், அன்று இளையராஜா அவைக்கு வரவில்லை. அதனால், இளையராஜாவைத் தவிர மற்றவர்கள் அன்று பதவியேற்றுக் கொண்டனர். இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க அமெரிக்கா சென்றிருந்த இளையராஜா, இந்தியா திரும்பியதும் எம்.பி.யாகப் பதவியேற்றுக் கொண்டார்.
இந்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த பார்லிமென்ட் குளிர்காலக் கூட்டத் தொடரில் ஒரு நாள் கூட இளையராஜா அதில் கலந்து கொள்ளவில்லை. இது மாநிலங்களவை வெளியிட்டுள்ள பதிவேட்டு குறிப்பில் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமான துறை சார்ந்த வல்லுநர்களை ராஜ்ய சபா உறுப்பினர்களாகத் தேர்வு செய்வது எதற்காகவென்றால், அந்தத் துறையின் சார்பில் உள்ள நிறை குறைகளை அவ்வப்போது அரசின் கவனத்துக்குக் கொண்டு வந்து செயல்படுத்துவதற்காகத்தான்.
ஆனால், அதற்காக நியமிக்கப்படுபவர்கள் அந்தப் பொறுப்பை வெறும் அலங்காரப் பதவிகளாக மட்டுமே பயன்படுத்தி வருகிறார்கள். அதற்கு உதாரணமாகத் திகழ்கிறார் இளையராஜா. முதல் கோணல் முற்றும் கோணல் என்பதற்கேற்ப, பதவியேற்பு விழாவுக்கே செல்லாத இளையராஜா, இன்று வரை பார்லிமென்ட் பக்கமே தலைவைத்துப் படுக்காமல் இருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியிருக்கிறது.