

டெல்லியின் பாரத் மண்டபத்தில் ஏஐ உச்சிமாநாடு கடந்த 16-ம் தேதி தொடங்கிய நிலையில் இன்றுடன் நிறைவடைகிறது. இந்த மாநாட்டில் ஒவ்வொரு நாளும் உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில் இந்த மாநாட்டில் பங்கேற்ற ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, அடுத்த 7 ஆண்டுகளில் ஏஐ உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டிற்காக ரூ.10 லட்சம் கோடி முதலீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து மாநாட்டில் பேசிய அவர், ‘ஜியோ எப்படி இணையத் சேவையை மலிவாக்கி புரட்சியை ஏற்படுத்தியதோ, அதேபோல் ஏஐ தொழில்நுட்பத்தையும் ஒவ்வொரு சாமானிய இந்தியருக்கும் மலிவான விலையில் கிடைக்கச் செய்வதே நோக்கமாகும். இனிமேல் இந்தியா வெளிநாடுகளிடம் இருந்து தொழில்நுட்பத்தை வாடகைக்கு எடுக்கத் தேவையில்லை’ என்று கூறினார்.
AI என்பது வெறும் தொழில்நுட்பம் மட்டுமல்ல, அது ஒரு மந்திரம் என்று கூறிய அம்பானி, உலகளவில் AI தொழில்நுட்பம் ஒரு சிலரிடம் மட்டுமே குவிந்து கிடக்காமல்,
அது அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
இந்த முதலீட்டின் மூலம் 'ஜியோ இண்டெலிஜென்ஸ்' என்ற பெயரில் முக்கியத் திட்டங்களை ரிலையன்ஸ் செயல்படுத்த உள்ளது. இந்த முதலீடு குறித்து பேசிய அம்பானி, இது வெறும் மதிப்பீடு துரத்தும் முதலீடு அல்ல. இது 60 ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கக்கூடிய பொருளாதார மதிப்பையும், மூலோபாய வலிமையையும் உருவாக்க வடிவமைக்கப்பட்ட பொறுமையான, ஒழுக்கமான, தேசத்தைக் கட்டியெழுப்பும் மூலதனம் என்று விளக்கினார்.
குஜராத்தின் ஜாம்நகரில் ஜிகாவாட் அளவிலான பிரம்மாண்டமான ஏஐ தரவு மையங்கள் (AI-ready data-centres) நிறுவும் பணி ஏற்கனவே தொடங்கிவிட்டது. 2026-ம் ஆண்டின் 2-ம் பாதியில் 120 மெகாவாட் திறன் பயன்பாட்டுக்கு வரும். நாடு முழுவதும் இந்தியர்கள் வாழும் மற்றும் வேலை செய்யும் இடங்களுக்கு அருகிலேயே அதிவேகமான மற்றும் குறைந்த செலவிலான ஏஐ சேவைகள் வழங்க, ஜியோ நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்ட 'எட்ஜ் கம்ப்யூட்டிங்' வசதி உருவாக்கப்படும்.
அனைத்து இந்திய மொழிகளிலும் உலகத் தரம் வாய்ந்த ஏஐ திறனை உருவாக்குவதே தங்களின் இலக்கு என்றும், இதற்காக ஸ்டார்ட்-அப்கள் மற்றும் IIT-களுடன் இணைந்து செயல்பட உள்ளதாகவும் முகேஷ் அம்பானி தெரிவித்தார்.
டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் தரவு உருவாக்கத்தில் இந்தியாவின் வலிமையை எந்த நாடும் ஈடுசெய்ய முடியாது என்றும் இந்த நூற்றாண்டில் இந்தியா உலகின் மிகப்பெரிய ஏஐ சக்தியாக உருவெடுக்கும் என்றும் முகேஷ் அம்பானி நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
Kalkionline-ஐ Google செய்திகளில் பின்தொடர... Google News
Kalkionline-ஐ முகநூலில் பின்தொடர... Kalkionline Facebook, Mangayar Malar Facebook
Kalkionline-ஐ இன்ஸ்டாகிராமில் பின்தொடர... Kalkionline Instagram, Mangayar Malar Instagram
Kalkionline-ஐ வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
Kalkionline-ஐ பின்தொடர: Youtube, Twitter
Add KalkiOnline as a preferred source on Google... Click Here