
ஒருவரே ஒரே நேரத்தில் ஒரே துறையில் ஆறு வெவ்வேறு மாவட்டங்களில் பணிபுரிய முடியுமா? முடியும் என்கிறது உத்தரப்பிரதேசத்தில் வெளிச்சத்திற்கு வந்த ஒரு அதிர்ச்சி அளிக்கும் மோசடி. 'அர்பித் சிங்' என்ற பெயரில் ஒரு நபர், ஒரே நேரத்தில் ஆறு அரசுப் பணிகளைப் பெற்று, ஒன்பது ஆண்டுகளாக அரசின் கணக்கிலிருந்து ரூ. 4.5 கோடிக்கும் அதிகமாகச் சுருட்டியிருப்பது தற்போது அம்பலமாகியுள்ளது.
சுகாதாரத் துறையில் பணியாளர் சரிபார்ப்புக்காக 'மானவ் சம்பதா' (Manav Sampada) என்ற இணையதளம் உருவாக்கப்பட்ட பிறகுதான் இந்த பிரம்மாண்டமான மோசடி வெளிச்சத்திற்கு வந்தது.
இந்தத் தளத்தில் மேற்கொள்ளப்பட்ட சரிபார்ப்பின்போது, ஆறு வெவ்வேறு மாவட்டங்களில் பணிபுரியும் X-கதிர் தொழில்நுட்ப வல்லுநர்கள் (X-ray Technicians) ஒரே பெயர், ஒரே தந்தை பெயர், ஒரே பிறந்த தேதியுடன் இருப்பது கண்டறியப்பட்டது.
ஒவ்வொரு போலி நியமனத்திலும், அர்பித் சிங் என்ற பெயரில் மாதந்தோறும் ரூ. 69,595 ஊதியமாகப் பெற்றுள்ளனர்.
இந்த ஆறு பேரும் ஒன்பது ஆண்டுகளாகச் சேர்ந்து மொத்தமாக ரூ. 4.5 கோடிக்கும் அதிகமாகப் பணத்தை அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியுள்ளனர்.
போலியான ஆதார், நகல் நியமனக் கடிதங்கள்!
விசாரணையில், இந்த மோசடி கும்பல் போலியான ஆதார் அட்டைகளையும், நகல் செய்யப்பட்ட நியமனக் கடிதங்களையும் பயன்படுத்தியிருப்பது தெரியவந்துள்ளது.
2016-ஆம் ஆண்டு உ.பி. துணைநிலை சேவைத் தேர்வு ஆணையம் (UPSSSC) நடத்திய தேர்வில் அர்பித் சிங் என்ற நபர் 80-வது வரிசை எண்ணில் தேர்ச்சி பெற்றிருந்தார்.
ஆக்ரா மாவட்டத்தில் உள்ள உண்மையான அர்பித் சிங்கின் நியமனக் கடிதத்தை நகல் எடுத்து, அதை மாஃபியா கும்பல் ஆறு போலி அர்பித் சிங்-களுக்கு வழங்கியுள்ளனர்.
இந்த போலி நபர்கள் பலராம்பூர், ஃபரூக்காபாத், பந்தா, ராம்பூர், அம்ரோஹா, ஷாம்லி ஆகிய மாவட்டங்களில் பணிக்குச் சேர்ந்துள்ளனர்.
போலீஸ் விசாரணையும், அரசியல் சர்ச்சையும்
இந்த மோசடி தொடர்பாக, சுகாதாரத் துறையின் இயக்குநர் (பாரா மெடிக்கல்) டாக்டர் ரஞ்சனா காரே, வஜிர்கஞ்ச் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
காவல்துறை அதிகாரிகள், ஏமாற்றுதல், ஆள்மாறாட்டம் செய்தல், போலி ஆவணங்கள் தயாரித்தல் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தலைமறைவாகிவிட்ட போலி நபர்களின் வீடுகளுக்குப் பூட்டுப் போடப்பட்டுள்ளதுடன், அவர்களது தொலைபேசி எண்களும் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன.
தற்போதைய முதல்வர் யோகி ஆதித்யநாத், இது தொடர்பாக துணை முதல்வரும், சுகாதாரத்துறை அமைச்சருமான பிரஜேஷ் பதக் உடனான ஆலோசனைக்குப் பிறகு, கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
எனினும், தலைமறைவாகிவிட்ட மோசடியாளர்களிடமிருந்து பணத்தை மீட்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
காவல்துறை இப்போது இந்த மோசடி கும்பலின் பின்னணியை முழுமையாக விசாரிக்கத் தொடங்கியுள்ளது.