மும்பையில் மட்டும்தான் ஆட்டோ சவாரி கட்டணம் 29 ரூபாயாக இருந்தாலும் கூடுதல் கட்டணம் கேட்கமாட்டார்கள் என்று டிவிட்டரில் ஒருவர் செய்த பதிவு வைரலாகியிருக்கிறது. இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் உள்ள ஆட்டோ கட்டணங்கள் குறித்து சுவராசிய விவாதம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
பொதுவாகவே வட இந்தியாவை விட தென்னிந்தியாவில் ஆட்டோ கட்டணம் என்பது சற்றே அதிகம். சென்னை, பெங்களூர் போன்ற மாநகரங்களில் ஆட்டோ கிடைப்பதே சிரமமான விஷயம். ஆனால், மகராஷ்டிராவில் நிலைமை வேறு விதமாக உள்ளது. மகராஷ்டிராவில் ஆட்டோவில் செல்வதும் ஓலா, ஊபர் போன்றவற்றில் செல்வதும் ஒன்றுதான். கட்டணத்தில் வேறுபாடு இருக்காது.
மகராஷ்டிராவை பொறுத்தவரை மும்பையில் மட்டுமல்ல மகராஷ்டிராவின் புனே, நாக்பூர் உள்ளிட்ட பகுதிகளிலும் இதே நேர்மையை ஆட்டோ ஓட்டுநர்களிடம் எதிர்பார்க்கலாம் என்று ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். இது பல ஆண்டுகளாகவே நடைமுறையில் இருக்கிறது. தனியார் டாக்ஸிகள் அதிகமாகிவிட்ட காலத்திலும் மும்பை, புனே போன்ற பகுதிகளில் ஆட்டோ கட்டணங்கள் அதிகரிக்கப்படவில்லை.
இந்தியாவிலேயே சென்னையில்தான் ஆட்டோ கட்டணம் அதிகம். ஓலா, ஊபர் போன்ற தனியார் டாக்சிகள் வந்தாலும் கூட தனியார் ஆட்டோ ஓட்டுநர்கள் கட்டணங்களை குறைத்துக்கொள்ள முன் வருவதில்லை. ஆட்டோ கட்டணத்தையும் பணமாக தரவேண்டியிருக்கும். ஒரு சில ஆட்டோ ஓட்டுநர்கள்தான் ஜிபே, பேடிஎம் பயன்படுத்துகிறார்கள்.
நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து வாரன் ரோடு செல்வதற்கு 2 கி.மீ தொலைவு இருக்கும். மீட்டர் இருந்தால் 35 ரூபாய்தான் கட்டணமாக விதிக்கவேண்டியிருக்கும். ஆனால், 100 ரூபாய்க்கு குறைவாக எந்தவொரு ஆட்டோவும் கிடைக்காது என்கிறார், ஒரு சென்னை வாசி
சென்னையில் ஆட்டோவுக்கு பேரம் பேச வேண்டியிருக்கும். ஆட்டோ ஓட்டுநர் 200 ரூபாய் கட்டணம் கேட்டால் நாம் 150 ரூபாய் தருவதாக பேச ஆரம்பிக்கவேண்டும். அப்போதுதான் குறைந்தபட்சம் 180 ரூபாய்க்கு டீல் முடியும் என்கிறார், இன்னொரு சென்னை வாசி.
ஓலா, ஊபர் போன்ற தனியார் வாகனங்களில் கூட 50 அல்லது 100 ரூபாய் வரை கூடுதல் கட்டணம் விதிக்கிறார்கள் என்கிறார், இன்னொருவர். சென்னையில் அதிகாலையில் எழுந்து எழும்பூர், சென்ட்ரல் சென்று ரயிலை பிடிக்க வேண்டியிருந்தால் புக்கிங் கட்டணத்தோடு கூடுதலாக கட்டணம் தர வேண்டியிருக்கும்.
பெங்களூரின் பிரச்னையே அதை விட மோசம் என்கிறார்கள். பெங்களூரில் ஆட்டோ கிடைப்பது சிரமம். அதை விட சிரமம், ஆட்டோ கட்டணத்திற்கான சரியான சில்லறை. ஜிபே, பேடிஎம் இருந்தால் ஓரளவு சமாளித்துவிடலாம் என்கிறார்கள். சென்னையிலும், பெங்களூரிலும் குறைந்த பட்ச கட்டணமாக 50 ரூபாய் விதிக்கப்படுகிறது. ஒரு கி.மீ தூரத்திற்கு குறைந்தபட்சம் 50 ரூபாய் தந்தாக வேண்டும்.