நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த அண்ணன், தம்பி படுகொலை - சோகத்தில் உறைந்த சீமான்..!

நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த அண்ணன், தம்பி படுகொலை - சோகத்தில் உறைந்த சீமான்..!

முன் விரோதம் காரணமாக நாம் தமிழர் கட்சி ஈரோடு கிழக்கு தொகுதியின் பொருளாளரை உறவினர் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் ரீதியாகவும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு முனிசிபல்காலனி, கிருஷ்ணசாமி வீதியைச் சேர்ந்தவர் லோகநாதன். இவரது மகன்கள் கௌதம், கார்த்திகேயன். இருவரும் வீட்டிலேயே செக்கு எண்ணெய் உள்ளிட்ட மசாலா பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், இவர்களது உறவினரான மாணிக்கம் பாளையத்தை சேர்ந்த ஆறுமுகசாமி என்பவர் நேற்றிரவு கௌதம் வீட்டிற்கு சென்று அண்ணன் தம்பி இருவரையும் வெளியே அழைத்து வந்து பேசி உள்ளார். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஆத்திரமடைந்த ஆறுமுகசாமி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து இருவரையும் சரமாரியாக குத்தி உள்ளார். ரத்த வெள்ளத்தில் கிடந்த அண்ணன் தம்பி இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அண்ணன் தம்பி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து ஈரோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு கிழக்கு தொகுதியியல் இடைத்தேர்தல் நெருங்குவதால் அரசியல் கட்சிகள் அங்கு முகாமிட்டுள்ளன. மேலும், கொலை செய்யப்பட்ட கார்த்திகேயன் நாம் தமிழர் கட்சி ஈரோடு கிழக்கு தொகுதியின் பொருளாளர் ஆவார். இதனால் அவரது படுகொலை அரசியல் ரீதியாகவும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன் விரோதம் காரணமாக உறவினர் ஒருவர் அண்ணன், தம்பி இருவரையும் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்த படுகொலை சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்து சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதியின் பொருளாளர் என் ஆருயிர் தம்பி லோ.கார்த்திகேயன் மற்றும் அவருடைய உடன் பிறந்த அண்ணன் கௌதம் ஆகிய இருவரும் படுகொலை செய்யப்பட்ட செய்தியறிந்து பேரதிர்ச்சியும், பெருந்துயரும் அடைந்தேன்,

பெற்ற இருபிள்ளைகளை இழந்து பெருந்துயரில் தவிக்கும் தம்பி கார்த்திகேயன் தாய், தந்தையருக்கு என்ன ஆறுதல் சொல்லித் தேற்றுவது என்றே தெரியாமல் மனம் வேதனையில் உழல்கிறது. தன் வேலை, தன் குடும்பம் என்று மட்டும் சுயநலமாய் இல்லாமல், தாய் மண்ணிற்கும், தான் பிறந்த பெருமைமிக்க இனத்திற்கும் தொண்டுபுரிய வேண்டுமென்ற தூய உள்ளத்துடன் வாழ்ந்தவன் அன்புத் தம்பி கார்த்திகேயன்.

 நல்ல அரசை நிறுவிவிட்டால் மக்களின் அனைத்து தேவைகளும் தானாக நிறைவேறிவிடும் என்ற தொலைநோக்கு பார்வையுடன் நாம் தமிழர் கட்சியில் தம்மை இணைத்துக்கொண்டு தமிழ்த்தேசிய அரசியல் களத்தில் தீவிர களப்பணியாற்றி 22 வயதிலேயே ஈரோடு கிழக்கு தொகுதியின் பொருளாளராகத் திறம்படச் செயல்பட்டவர் அன்புத்தம்பி கார்த்திகேயன். அண்மையில் நடைபெற்ற ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் அறிமுகக் கூட்டத்திற்கான பணிகளில் துடிப்புடன் பணியாற்றிய தம்பியின் உழைப்பு போற்றுதற்குரியது.

இவ்வாறு சீமான் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com