
இஸ்லாமிய பெண்கள் அழகுநிலையங்களுக்குச் செல்ல வேண்டாம் என உத்தரப்பிரதேச மாநிலம், சஹ்ரான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மதகுரு முப்தி ஆஸாத் காஸ்மி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசுகையில், இஸ்லாமிய பெண்கள் ஆண்கள் பணிபுரியும் அழகு நிலையங்களுக்குச் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். அதுபோன்ற இடங்களில் மேக்கப் செய்துகொள்வது சட்டவிரோதமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக கடந்த மாதம் கான்பூரில் முஸ்லிம் பெண் ஒருவர், தனது புருவங்களை அழகுநிலையத்தில் வடிவமைத்த தகவலை அறிந்த, சவூதியில் உள்ள அவரது கணவர், அந்த பெண்ணை மும்முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்துவிட்டார். இது தொடர்பாக அந்த பெண், போலீசில் புகார் பதிவு செய்துள்ளார்.
தமது கணவர் பழமையான கலாசாரத்தை விரும்புவர் என்றும் நாகரீகமாக இருப்பது அவருக்கு பிடிக்காது என்றும் போலீஸிடம் அந்த பெண் தெரிவித்துள்ளார்.
கான்பூரைச் சேர்ந்த குல்சைபா என்ற பெண் மேலும் கூறுகையில், “கணவருடன் விடியோ கால் மூலம் பேசினேன். அப்போது நான் புருவத்தை திருத்தியமைத்திருப்பதை பார்த்த அவர் என்னிடம் அதுபற்றி கேள்வி எழுப்பினார். நான் அவரிடம் விளக்கமாக எடுத்துக்கூறியும், அவர் சமாதானமாகவில்லை. கோபத்தில் விடியோவிலேயே மூன்று முறை தலாக் கூறிவிட்டார்” என்றார்.
இந்நிலையில், இஸ்லாமிய பெண்கள் ஆண்கள் பணிபுரியும் அழகுநிலையங்களுக்குச் செல்லாமல் பெண்கள் பணிபுரியும் அழகு நிலையங்களுக்கு மட்டுமே செல்ல வேண்டும் என மதகுரு முப்தி ஆஸாத் காஸ்மி வலியுறுத்தியுள்ளார்.