"துயர் மிகுந்தது தான் என் தனிப்பட்ட வாழ்க்கை" ஸ்ரீதர் வேம்பு உருக்கம் !

"துயர் மிகுந்தது தான் என் தனிப்பட்ட வாழ்க்கை" ஸ்ரீதர் வேம்பு உருக்கம் !
Published on

ஸோஹோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு "மனைவிக்குத் தெரியாமல் தன்னிடமிருந்த தனது நிறுவன பங்குகளை தனது உறவினர்களுக்கு விற்று விட்டதாகக் கூறப்படும்" விவகாரம் குறித்து நீண்ட விளக்கமளித்துள்ளார்.

ஸ்ரீதர் வேம்புவும் பிரமிளாவும் கடந்த 2021ல் விவாகரத்துக் கோரி கலிபோர்னியா நீதிமன்றத்தை அணுகினர். தற்போது இந்த வழக்கு அங்கு நடைபெற்று வருகிறது. அந்த வழக்கில்தான் தனக்கும் தன் மகனுக்கும் சேர வேண்டிய பங்குகளை தனது சகோதரியின் பெயருக்கு மாற்றிவிட்டதாக பிரமிளா தரப்பில் நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த வாதங்களை அடிப்படையாக வைத்து போர்பர்ஸ் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

போர்பர்ஸ் இதழில் வெளியான இந்த செய்திக் கட்டுரை சமூக வலைதளங்களில் தீயாக பரவிவரும் நிலையில், இந்த குற்றச்சாட்டுகள் குறித்த தனது பக்க நியாயங்களை உருக்கமாக தெரிவித்துள்ளார் ஸோஹோவின் நிறுவனரும் சிஇஓவுமான ஸ்ரீதர் வேம்பு .

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ள ஸ்ரீதர் வேம்பு, "என் மீது தனிப்பட்ட முறையில் மிக மோசமான தாக்குதல் தொடுக்கப்பட்டு வரும் நிலையில், அது குறித்து விளக்கமளிக்க வேண்டிய நிலை எனக்கு ஏற்பட்டுள்ளது.

என் தொழில் வாழ்க்கைக்கு முற்றிலும் முரண்பட்ட, துயர் மிகுந்தது தான் என் தனிப்பட்ட வாழ்க்கை.

மகனின் ஆட்டிசம் எங்கள் வாழ்வைச் பெருமளவு சீரழித்துவிட்டது. தற்கொலை எண்ணம் ஏற்படுமளவுக்கு மன அழுத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக நானும் எனது மனைவி பிரமிளாவும் ஆட்டிசத்திற்கு எதிராகப் போராடிவருகிறோம். அவர் மிகச் சிறந்த அன்னை. அவர் மிகுந்த அன்புடன் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட எனது மகனை கவனித்துக்கொண்டிருக்கிறார். அவரோடு நானும் கடுமையாக இதில் ஈடுபட்டிருக்கிறேன்.

எங்கள் மகனுக்கு தற்போது 24 வயதாகும் நிலையில், அவருக்கு அளிக்கப்பட்டுவந்த தொடர் சிகிச்சைகள் எதுமே பெரிய பலனளிக்கவில்லை. எங்களை நேசிக்கக்கூடிய மக்களுக்கு நடுவில் கிராமப்புற இந்தியாவில் வாழ்ந்தால் நன்றாக இருக்கும் என நான் நினைத்தேன். ஆனால், நான் அவரைக் கைவிடுவதாக மனைவி கருதினார். அந்த அழுத்தத்தில் தான் எங்கள் திருமண பந்தம் உடைந்தது.

துரதிர்ஷ்டவசமாக எங்கள் திருமண முறிவு, புதிய மோதலை ஏற்படுத்தியது. ஸோஹோ கார்ப்பரேஷனில் எனது உரிமைகள் குறித்து நிறுவப்படாத குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் அவர் முன் வைத்தார். ஊடகங்களை நாடவும் அவர் முடிவெடுத்தார். இந்த விவகாரம் தற்போது அமெரிக்காவில் நீதிமன்றத்தில் இருக்கிறது. என்னுடைய வாதங்கள் உங்கள் முன் பொதுவில் உள்ளது.

என்னிடமிருந்த பங்குகளை நான் யாருக்கும் மாற்றவில்லை. எங்கள் 27 வருட வரலாற்றில் 24 வருடங்கள் நான் அமெரிக்காவில்தான் இருந்தேன். அந்த கால கட்டத்தில்தான் இந்தியாவில் நிறுவனம் உருவாக்கப்பட்டது.

பிரமிளாவையும் எனது மகனையும் நிதி ரீதியாக கைவிட்டுவிட்டேன் என்று சொல்வது முழுமையான கட்டுக்கதை. நான் வாழும் வாழ்வை விட வசதியான வாழ்வையே அவர்கள் வாழ்கிறார்கள். நான் அவர்களை முழுமையாக ஆதரித்து வந்துள்ளேன். கடந்த மூன்று ஆண்டுகளில் எனது அமெரிக்க சம்பளம் எனது மனைவி வசம் தான் உள்ளது. எங்கள் வீட்டையும் அவருக்கே கொடுத்து விட்டேன். அவருடைய ஃபவுண்டேஷனையும் ஸோஹோ ஆதரித்து வருகிறது.

நான் இப்போது செய்துகொண்டிருக்கும் சேவையை செய்யாவிட்டால், வாழ்வதற்கான ஆசை எப்போதோ என்னை விட்டுப் போயிருக்கும் என்பதை மட்டும்தான் இப்போது சொல்ல முடியும்.

மிக துயர்மிகுந்த சொந்த வாழ்வை நாங்கள் வாழ்ந்திருக்கிறோம். இப்போது எனது சித்தப்பாவின் பொய்களால் இந்தத் துயரம் சிக்கலான சட்ட வடிவம் எடுத்திருக்கிறது. நான் எப்போதுமே பிரமிளாவையும் எனது மகனையும் ஆதரித்து வந்துள்ளேன். வாழும்வரை தொடர்ந்தும் ஆதரிப்பேன். உண்மையும் நீதியும் வெல்லும் என நம்புகிறேன்.

இதற்கு முன்பாகவும் மிக மோசமான தனிப்பட்ட தாக்குதல்களை எதிர்கொண்டிருக்கிறேன். இதையும் எதிர்கொள்வேன். கிராமப்புற இந்தியாவில் தொடர்ந்து நான் நிறுவனங்களை உருவாக்குவேன். அதுதான் என் வாழ்வில் எஞ்சியிருக்கும் நோக்கம். ஒரு நாள் என் மகனும் இதில் இணைந்துகொள்வான் என பிரார்த்திக்கிறேன்" என்று விளக்கமளித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com