மியான்மர் நிலநடுக்கம் குறித்தான செய்திதான் உலக மக்களை அச்சுறுத்தி வருகிறது. நிலநடுக்கத்தில் பலியானவர்கள் குறித்த செய்திகள் இன்றும் வந்துக்கொண்டிருக்கும் நிலையில், தற்போது தொழுகையில் இருந்த 700 பேர் பலியான சோகக் கதை குறித்தத் தகவலும் வெளியாகியிருக்கிறது.
உலகம் முழுவதும் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு மக்களை அச்சுறுத்துகிறது. அந்தவகையில் இரண்டு நாட்கள் முன்னர் மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ரிக்டர் அளவில் 7 புள்ளிகளுக்கு மேல் பதிவான இந்நிலநடுக்கம் இந்தியாவின் கொல்கத்தா, மணிப்பூர் மற்றும் சீனா, வங்கதேச பகுதிகளிலும் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மியான்மர் மற்றும் தாய்லாந்தில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது.
ஆனால், தாய்லாந்து மற்றும் மியான்மரில் கட்டடங்கள் அனைத்தும் சீட்டுக் கட்டுகள் போல் சரிந்து விழுந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தால் கடுமையான உயிர்ச்சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டுள்ளது.
மியான்மரில் 1700 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 3400 க்கும் மேற்பட்டோர் காயத்துடன் மீட்கப்பட்டுள்ளனர். மீட்புப்பணிகள் தொடர்ந்து வரும் நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை பன்மடங்கு உயரும் என்று அஞ்சப்படுகிறது. பல நாடுகள் தொடர்ந்து உதவி செய்து வருகின்றன.
மேலும் நிலநடுக்கம் ஏற்பட்டு இரண்டு நாட்கள் ஆன நிலையில், இன்னும் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மீட்புப் பணிகள் தொடர்வதால், அவ்வப்போது செய்திகள் வெளியாகிக்கொண்டே இருக்கின்றன.
இந்த நிலநடுக்கம் ரமலான் வெள்ளிக்கிழமை நேரத்தில் நடந்ததால், 700 முஸ்லீம்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது மசூதிகள் இடிந்து விழுந்து உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து முஸ்லீம் கமிட்டியைச் சேர்ந்த துன் கி கூறுகையில், சுமார் 60 மசூதிகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன என்றும், அவை பெரும்பாலும் பழமையான கட்டடங்கள் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளன.
ஆனால், மீட்கப்பட்ட உடல்களில் 700 முஸ்லீம்களின் உடல்களும் கிடைத்தனவா என்பது குறித்த செய்தி இன்னும் வெளியாகவில்லை. அடையாளம் காணும் முயற்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலநடுக்கத்தால், நேபிடோ மற்றும் மண்டலாய் நகரங்கள் மிகுந்த சேதமடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.