பாடகர் வீட்டில் மாயமான நகைகள். விசாரணையில் திடீர் திருப்பம்!

பாடகர் வீட்டில் மாயமான நகைகள். விசாரணையில் திடீர் திருப்பம்!

பிரபலமானவர்கள் சொத்து சேர்ப்பதில் தவறில்லை. ஆனால் சேர்த்ததை பாதுகாக்காமல் அவ்வப்போது வீட்டில் பணி செய்வோரை காவலர்களிடம் சிக்க வைத்து அவர்களின் மனதை வேதனைப்படுத்துவது தொடர்கதையாகி வருகிறது. அது மட்டுமின்றி கணவன் மனைவிக்குள் பிரச்சினை என்றாலும் புகாரின் பெயரில் விசாரணை நடத்தும் காவலர்களின் நேரம்தான் வீணாகிறது. இதோ இந்த செய்தி அதைத்தான் சொல்கிறது.

திரையிசைப் பாடகர்களில் புகழ்பெற்றவர் கே.ஜே. யேசுதாஸ். அவரின் மகன் பாடகர் விஜய் யேசுதாஸ். இவரது வீட்டில் 60 சவரன் அப்புறம் தங்கம் வைர நகைகள் மாயமான விவகாரத்தில் வீட்டில் வேலை செய்த 11 வேலைக்காரர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் யாரும் அவைகளைத் திருடவில்லை எனத் தெரியவந்துள்ளது.

சென்னை ஆழ்வார்பேட்டை மூன்றாவது தெருவை சேர்ந்தவர் பாடகர் விஜய் யேசுதாஸ். இவர் தனது மனைவி தர்ஷனாவுடன் வசித்து வருகிறார்.  பிப்ரவரி 18ஆம் தேதி வீட்டில் உள்ள நகைகளை சரி பார்க்கும்போது அதில் 60 சவரன் தங்கம் மற்றும் வைர நகைகள் காணவில்லை என்று  விஜய் யேசுதாஸ் மனைவி தர்ஷனா அபிராமபுரம் காவல் நிலையத்தில் கடந்த மார்ச் 30ஆம் தேதி புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் அபிராமபுரம் காவலர்கள் விஜய் யேசுதாஸ் வீட்டிற்கு சென்று நேரில் விசாரணை நடத்தினர். விசாரணையில் அனைத்தும் தர்ஷனாவுக்கு  அவரது பெற்றோர் திருமணத்தின்போது அளித்தவை என்பது தெரிய வந்துள்ளது. அதே நேரம் நகைகள் வைக்கப்பட்ட லாக்கர் ரகசிய குறியீடு மற்றும் ரகசியங்கள் இருந்தால் மட்டுமே திறக்க முடியும் என்பதும்,  இது  கணவன் மனைவிக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் என்பது விசாரணையில் தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து  வெளிநாட்டில் இருந்த  விஜய் யேசுதாஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது ஆனால் விஜய் யேசுதாஸ் இன்று வரை துபாயிலிருந்து சென்னைக்கு வரவில்லை. மேலும் இது  குறித்து காவலர்கள்  பலமுறை அவரிடம்  தொடர்பு கொண்டு  விளக்கம் கேட்டும் அவர் உரிய பதில் அளிக்கவில்லை எனப்படுகிறது.  பின்னர் வீட்டில் வேலை செய்த பதினோரு  பணியாளர்களிடம் காவலர்கள்  தனித்தனியாக விசாரணை நடத்தினர். முக்கியமாக சிலரிடம்  லாக்கர் பெட்டியின் ரகசியங்களை கேட்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கு எதுவும் தெரியவில்லை. இதையடுத்து  நடத்திய விசாரணை முடிவில் பணியாளர்கள் யாரும்   திருடவில்லை என்று தெரியவந்துள்ளது.

லாக்கரில் உள்ள ரகசிய எண்கள் விஜய் யேசுதாஸ் மற்றும் மனைவி தர்ஷனாவுக்கு மட்டுமே தெரியும். அதனால் வெளியாட்கள் யாரும் நகைகளை திருட வாய்ப்பு இல்லை என்று இதுவரை நடத்திய விசாரணை மூலம் தெரிய வந்துள்ளதாக காவல்துறையினர்  தெரிவித்துள்ளனர். அதே நேரம் போலீசாருக்கு புகார் அளித்த விஜய் யேசுதாஸ் மனைவி மீது காவல்துறையின்  சந்தேகம் திரும்பியுள்ளது. அவரது வீட்டில் கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி நகைகள் மாயமானது தெரிந்தும், அப்போது புகார் அளிக்காமல் 40 நாட்கள் கழித்து மார்ச் 30ஆம் தேதி புகார் அளிக்க என்ன காரணம்? கணவன் மனைவி இடையிலான பிரச்சனையில் நகைகள் மாயமானதாக தர்ஷனா நாடகமாடுகிறாறா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதனால் லாக்கரிலிருந்து மாயமான 60 சவரன் நகைகள் குறித்து விஜய் யேசுதாஸ் மனைவி தர்ஷனாவிடம் விசாரணை நடத்த காவலர்கள்  முடிவு செய்துள்ளனர் 

ஒரு வேளை சாப்பாட்டுக்கே கஷ்டபடுவோர் உள்ள நம் நாட்டில்தான் இம்மாதிரி லாக்கரில் உள்ள நகைகள் காணாமல் போவதும் வருமானத்துக்கு அதிகமான சொத்துக்குவிப்புகளும் அரங்கேறுகிறது. கொடுமை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com