
நேபாளத்தில் சுற்றுலாப் பயணிகள் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளானதில் அதில் பயணித்த 5 பேர் உயிரிழந்தனர்.
இமயமலைக்கு உலக நாடுகள் பலவற்றிலும் இருந்து அன்றாடம் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்தவண்ணம் உள்ளனர். குறிப்பாக, மேற்கு நாடுகளில் கோடை காலம் தொடங்கிவிட்ட நிலையில் இந்தியாவின் குளுமையான பகுதிகளை நோக்கி அவர்கள் படையெடுத்து வருவது இயல்பு. இதில் குறிப்பாக எவரெஸ்ட் சிகரம் அமைந்துள்ள நேபாள மலைப் பகுதிகளுக்கு வான்வழியாகப் பறந்துசென்று வருவதில் மேல்நாட்டுப் பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
இப்படி வந்த மெக்சிகோ நாட்டின் ஐந்து சுற்றுலாப் பயணிகளுடன், நேபாளத்தின் சொலுகும்பு மாவட்டத்தில், ஒரு ஹெலிகாப்டர் சாகசப் பயணத்துக்குக் கிளம்பியது. சுர்கே விமானநிலையத்தில் காலை 10.04 மணிக்குப் புறப்பட்ட ஹெலிகாப்டர், அங்குள்ள லம்ஜுரா மலைப் பகுதியில் சென்றுகொண்டு இருந்தது. 10.12 மணியளவில் அந்த உலங்கு வானூர்தி விமானக் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பை இழந்தது என்கிறார், திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தின் மேலாளர் ஞாயானேந்திர புல்.
உடனடியாக, அந்த வானூர்தியின் நிலவரத்தை அறிந்துகொள்வதற்காக, இரண்டு ஹெலிகாப்டர்கள் அனுப்பிவைக்கப்பட்டன. ஆனால் மோசமான வானிலை காரணமாக அவை போன வேகத்தில் திரும்பிவந்துவிட்டன.இதனிடையே லம்ஜுரா மலைப் பகுதியின் சிகன்ந்தண்டா எனும் இடத்தில் குறிப்பிட்ட ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி விழுந்து கிடப்பதாக உள்ளூர் மக்கள் காவல்துறைக்கு தெரிவித்தனர். சம்பவத்தின்போது பெரும் வெடிப்புச் சத்தம் கேட்டதாகவும் அதைக் கேட்டு ஓடிவந்து பார்த்தபோது ஹெலிகாப்டர் எரிந்து விழுந்துகொண்டு இருந்தது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
தகவலையடுத்து, காவல், மீட்புத் துறையினர் அங்கு சென்று மீட்பில் ஈடுபடத் தொடங்கினர்.விசாரணையின் பிறகுதான் விபத்துக்கான உண்மையான காரணம் தெரியவரும் என்று வான் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.விபத்துக்கு உள்ளான விமானத்தை, 1997ஆம் ஆண்டு முதல் வான போக்குவரத்தை நடத்திவரும் மனங் ஏர் எனும் நிறுவனம் இயக்கிவந்தது. குறிப்பாக, சாகசச் சுற்றுலாப் பயணிகளுக்கான வான்பறப்புகளை இந்த நிறுவனம் ஏற்பாடு செய்துதருவது குறிப்பிடத்தக்கது. ஹெலிகாப்டரை இயக்கிய மூத்த விமானி செத் பி குருங்கு, முதுநிலை கேப்டன் நிலை கொண்டவர்; அவரின் நிலை பற்றி தகவல் ஏதும் இதுவரை உறுதியாகவில்லை.