அமைச்சர் சாமிநாதன்
அமைச்சர் சாமிநாதன்

தமிழில் பெயர்ப் பலகை இல்லாவிட்டால் நடவடிக்கை: அமைச்சர் சாமிநாதன்!

Published on

‘தமிழில் பெயர் பலகை இல்லாத கடைகள் மற்றும் நிறுவனங்கள் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடரும்’ என்று அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ‘தமிழ் வளர்ச்சிக்கு திமுக அரசு கூடுதல் முக்கியத்துவம் அளித்து வருகிறது. பள்ளிகளில் மாணவர்கள் தமிழில் கையொப்பமிட அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வேற்று மாநில மாணவர்களுக்கும் தமிழை கொண்டு செல்லும் விதமாக தமிழை கற்பிப்போம் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அரசு அலுவலர்களும் தமிழ் கையொப்பமிட அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர்.

மேலும், தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் தொழிலாளர் நலத்துறை மூலமாக கடைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்களில் பெயர் பலகையில் தமிழில் பெயர் இடம்பெறாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கை வருங்காலங்களிலும் தொடரும். பெயர் பலகைகளில் தமிழ் இடம் பெற வேண்டும் என்பது கட்டாயமாகும். எனவே, அனைவரும் அதைக் கடைபிடிக்க வேண்டும்.

திருச்சி மற்றும் மதுரையில் உள்ள பத்திரிக்கையாளர்களுக்கு சலுகை விலை வீட்டுமனை வழங்கப்பட்டு, பிறகு அதற்கான பட்டா ரத்து செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக வருவாய்த்துறையுடன் இணைந்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

மேலும், பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்பட்டு அலுவல் சாராத பணிக்காக மூன்று மூத்த பத்திரிகையாளர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர். அவர்களைக் கொண்டு மூன்று முறை கூட்டங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. மேலும், எண்ணற்ற கோரிக்கை வாரியத்துக்கு வந்த வண்ணம் இருக்கின்றன. அவற்றை முதல்வர் கவனத்துக்குக் கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும். பத்திரிக்கையாளர் நல வாரியத்தின் மூலமாக பத்திரிகையாளர்களுடைய உரிமை மற்றும் நலன்களை பாதுகாக்க அரசு பல்வேறு சலுகைகளை வழங்க உள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மன்னர் ராஜராஜ தொண்டைமானுக்கு மணிமண்டபம் அமைப்பதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட பிறகு பணிகள் தொடங்கப்படும்” என்று அப்போது அவர் தெரிவித்தார்.

logo
Kalki Online
kalkionline.com