மும்பை ஐ.ஐ.டி.க்கு நந்தன் நிலேகனி ரூ.315 கோடி நன்கொடை!

மும்பை ஐ.ஐ.டி.க்கு நந்தன் நிலேகனி ரூ.315 கோடி நன்கொடை!

இன்ஃபோசிஸிஸின் இணை நிறுவனர் நந்தன் நிலேகனி, தான் படித்த கல்வி நிறுவனமான இந்திய தொழில்நுட்ப கழகத்துக்கு (மும்பை ஐ.ஐ.டி.) ரூ.315 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளார். அந்த நிறுவனத்துடன் தமக்குள்ள 50 ஆண்டுகால உறவை நினைவுபடுத்தும் வகையில் இதை வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். நந்தன் நிலேகனி, 1973 ஆம் ஆண்டு இங்கு எலெக்டிரிகல் என்ஜினீயரிங் இளங்கலை பட்டப்படிப்பில் சேர்ந்தார்.

உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை உருவாக்கவும், பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சிகளை முன்னெடுப்பதற்கும், மேலும் ஐ.ஐ.டி. மும்பையில் சுற்றுச்சூழலை பாதுகாப்பதையும் நோக்கமாக கொண்டு இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் ஒரு முன்னாள் மாணவர் வழங்கியுள்ள மிகப்பெரிய நன்கொடையாகும் இது.

எனது வாழ்க்கையில் மும்பை ஐ.ஐ.டி.தான் திருப்புமுனையை ஏற்படுத்தியது. எனது வளர்ச்சிக்கான ஆண்டுகளை வடிவமைத்து, எனது வாழ்க்கை பயணத்திற்கான அடித்தளத்தை ஏற்படுத்தியதும் அந்த நிறுவனம்தான். மும்பை

ஐ.ஐ.டி.யுடன் எனக்கு 50 ஆண்டு கால உறவு உள்ளது. அதை கொண்டாடும் வகையில், அதற்கு நன்றிக்கடன் செலுத்தும் வகையிலும் அதன் எதிர்காலத்திற்காக எனது பங்களிப்பை செய்துள்ளேன் என்று நந்தன் நிலேகனி வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நன்கொடை வெறும் நிதிப் பங்களிப்பைவிட மேலானது. எனக்கு நிறைய வழங்கிய இடத்திற்கு எனது காணிக்கைதான் இது. நாளைய உலகத்தை வடிவமைக்கும் மாணவர்களுக்காக இதை அர்ப்பணிக்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நிலேகனி மற்றும் மும்பை ஐ.ஐ.டி.யின் இயக்குநர் பேராசியர் சுபாஷிஷ் செளதுரியும் பெங்களூருவில் செவ்வாய்க்கிழமை கையெழுத்திட்டனர்.

மும்பை ஐ.ஐ.டி.யின் முன்னாள் மாணவரான நந்தன் நிலேகனி, நிறுவனத்துக்கு மிகப்பெரிய தொகையை நன்கொடையாக அளித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த தொகை ஐ.ஐ.டி. மும்பையின் வளர்ச்சிக்கும், உலகளாவிய தலைமைப்பாதையை நோக்கிச் செல்வதற்கும் உதவிகரமாக இருக்கும் என்று பேராசிரியர் செளதுரி கூறியுள்ளார்.

இதற்கு முன்னர் நந்தன் நிலேகனி மும்பை ஐ.ஐ.டி.க்கு ரூ.85 கோடியை நன்கொடையாக வழங்கியிருந்தார். இப்போது கொடுத்துள்ள ரூ.315 கோடி நன்கொடையையும் சேர்த்தால் அவர் மொத்தம் ரூ.400 கோடி பங்களிப்புச் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com