நாங்குநேரி சம்பவம்: முதல்வர் கண்டனமும்; நடவடிக்கையும்!

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்
Published on

நாங்குநேரியில் பட்டியலின மாணவர் ஒருவர் தாக்கப்பட்டதைக் கண்டித்து தமிழக முதலமைச்சரின் அறிக்கை மற்றும் அதில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து காவல்துறை அறிவித்திருக்கிறது.

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியை சேர்ந்த பட்டியலின பள்ளி மாணவர் ஒருவர் தனது சக பள்ளி மாணவர்களுடன் ஏற்பட்ட பிரச்னையின் காரணமாக, அவரது வீட்டு வாசலில் வைத்து மிகக் கொடுமையாகத் தாக்கப்பட்டார். இதில் அந்த மாணவரின் தங்கையும் படுகாயம் அடைந்தார். இந்தச் சம்பவத்தைப் பார்த்த பாதிக்கப்பட்ட மாணவருடைய தாத்தா சம்பவ இடத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த செய்தி வெளியாகி, தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பாதிக்கப்பட்ட மாணவரையும் அவரது சகோதரியையும் தனது தம்பி, தங்கையைப் போல் பாவித்து, அவர்களுக்கான கல்விச் செலவை தாமே ஏற்பதாக உறுதி அளித்துள்ளார். மேலும், பாதுகாக்கப்பட்ட கல்வி வளாகம் அமைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்திருக்கிறார்.

இதைத் தொடர்ந்து, இன்று  சபாநாயகர் அப்பாவு மற்றும் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் பாதிக்கப்பட்ட மாணவரை மருத்துவமனையில் சென்று சந்தித்தனர். அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ கால் மூலமாக பாதிக்கப்பட்ட மாணவரிடமும் அவருடைய பெற்றோரிடமும் பேசினார்.

இது தொடர்பாக, முதல்வர் வெளியிட்டுள்ள கண்டனத்தில், “நாங்குநேரியில் நடைபெற்ற சம்பவம் நடுக்கத்தை ஏற்படுத்துகிறது. இளம் மாணவர்களிடம் கூட சாதிய நச்சு எந்தளவுக்கு ஊடுருவி இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது. சக மனிதரை நமக்குச் சமமான ஒருவராக அடையாளம் காணாமல், சாதி வேறுபாடும் மாறுபாடும் பார்த்து வெறுப்பதும், அத்தகைய வெறுப்பை வன்முறையாக வெளிப்படுத்துவதும் இன்னும் தொடர்வது சகிக்க முடியாததாக இருக்கிறது.

அதே நேரத்தில் மாணவர்கள் மனதில் சமூக நல்லுறவை விதைப்பதை அனைவரும் கடமையாகக் கொள்வோம். குறிப்பாக, ஆசிரியர் சமூகமானது, இதுபோன்ற நன்னெறிகளை ஊட்ட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். வெறுப்பு மனம் கொண்டவர்களால் எந்த வெற்றியையும் அடைய முடியாது. பேசும் மொழியால் நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள்! நமக்குள் வெறுப்புணர்வும் ஏற்றத்தாழ்வு எண்ணமும் கூடாது என்பதை இளைய சமுதாயம் உணர்ந்து நடந்துகொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து, திரைப்பட இயக்குனர் ரஞ்சித், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் பல்வேறு மாணவர் அமைப்புகளும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தமிழ்நாடு காவல்துறை வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், “நாங்குநேரி சம்பவத்தில் தொடர்புடைய 6 இளம் சிறார்கள் கைது செய்யப்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது கொலை முயற்சி, வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com