‘நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வரமாட்டார்’ சரத்பவார் அதிரடி!

‘நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வரமாட்டார்’ சரத்பவார் அதிரடி!

‘நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வரமாட்டார்’ என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் உறுதிபட தெரிவித்திருக்கிறார்.

நேற்று முன்தினம் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ‘அடுத்த ஆண்டு செங்கோட்டையில் கொடியேற்ற மீண்டும் வருவேன்’ என்று கூறியிருந்தார். இந்த நிலையில் சரத்பவார் அவரது பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக மகாராஷ்டிர பாஜக தலைவர் தேவேந்திர பட்னவிஸின் கூறியிருந்த ஒரு கருத்தை அவர் சுட்டிக்காட்டினார். “2019ம் ஆண்டு மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவை தேர்தலின்போது அப்போது முதல்வராக இருந்த தேவேந்திர பட்னவிஸ் தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் பேசுகையில், ‘மீண்டும் முதல்வராக வருவேன்’ என்று கூறியிருந்தார். ஆனால், என்ன நடந்தது? அவரால் முதல்வராக வரமுடியவில்லை. அவருக்கு துணை முதல்வர் பதவிதான் கிடைத்துள்ளது என்று சரத்பவார் கூறினார்.

ஷிண்டே தலைமையிலான சிவசேனையுடன் பாஜக கூட்டணி வைத்ததன் மூலம் பட்னவிஸ் துணை முதல்வராகியுள்ளார். பிரதமரின் பேச்சை பார்க்கும்போது அவர், பட்னவிஸிடம் ஆலோசனை கேட்டிருப்பாரோ என்று தோன்றுகிறது. அதனால்தான், ‘நான் மீண்டும் பிரதமராக வருவேன்’ என்று நரேந்திர மோடி கூறியுள்ளார். அதன் அர்த்தம் என்னவென்றால் அவர் மீண்டும் பிரதமராக வரமாட்டார் என்பதுதான். 2019ல் தேவேந்திர பட்னவிஸுக்கு ஏற்பட்ட நிலைதான் பிரதமர் மோடிக்கும் ஏற்படும்” என்றார் சரத்பவார்.

‘மணிப்பூரில் வன்முறை தொடர்கிறது. அங்கு இரண்டு பெண்கள் நிர்வாணமாக ஊர்லமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். கடந்த மூன்று மாதங்களாக வன்முறை தொடர்ந்தும், பிரதமர் மோடி அதை கண்டுகொள்ளவில்லை’ என்று பவார் குற்றம் சாட்டினார்.

‘தற்போது நாட்டில் அரசியல் நிலவரம் பாஜகவுக்கோ அல்லது பிரதமர் நரேந்திர மோடிக்கோ சாதகமானதாக இல்லை. பாஜகவுக்கு மாற்று எதிர்க்கட்சி கூட்டணிதான். ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1ம் தேதி மும்பையில், ‘இந்தியா’ எதிர்க்கட்சிக் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. அப்போது பல்வேறு முக்கியமான அரசியல் விவகாரங்கள் விவாதிக்கப்பட உள்ளன. 2024 மக்களவைத் தேர்தலுக்கான உத்திகளும் வகுக்கப்படும்’ என்று பவார் தெரிவித்தார்.

‘சமீபத்தில் தமது உறவினர் அஜித்பவாரை புனேயில் சந்தித்ததில் எந்த ரகசியமும் இல்லை’ என்று குறிப்பிட்ட சரத்பவார், ‘பாஜகவில் நான் சேரும் பேச்சுக்கே இடமில்லை. மகாராஷ்டிர விகார் அகாதி கூட்டணியில் தேசியவாத காங்கிரஸ் தொடர்ந்து நீடிக்கும்’ என்றும் குறிப்பிட்டார்.

இதனிடையே, ‘உண்மையான தேசியவாத காங்கிரஸ் கட்சி நாங்கள்தான். கட்சியின் பெயர் மற்றும் சின்னம் தங்களுக்கே சொந்தம்’ என்று சரத்பவார் மற்றும் அஜித்பவார் இரு கோஷ்டியினரும் கோரிவரும் நிலையில், அவர்களுக்கு அனுப்பிய நோட்டீஸுக்கு பதிலளிக்க மேலும் மூன்று மாத கால அவகாசம் வழங்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com