371 நாட்கள் விண்வெளியில் இருந்த நபர் மீண்டும் பூமிக்கு திரும்பினார்!

 Rubio
Rubio
Published on

நாசா விஞ்ஞானி ஒருவர் 371 நாட்களை விண்வெளியில் கழித்துவிட்டு மீண்டும் பூமிக்கு திரும்பியுள்ளார். விண்வெளியில் மேற்கொள்ளப்பட்ட நீண்டகால ஆராய்ச்சிக்குப் பிறகு இவர் பூமிக்கு திரும்பியுள்ள செய்தி இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. 

நாசா விஞ்ஞானியான ரூபியோ மற்றும் அவருடன் இரண்டு ரஷ்ய விஞ்ஞானிகள் நேற்று சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து பூமிக்கு திரும்பினார். இவர்கள் ரஷ்யாவின் சோர்ஸ் MS 23 என்ற கேப்சூலின் உதவியுடன் பூமியில் தரையிறங்கினர். இந்த கேப்சூல் நேற்று இரவு பூமியின் வளிமண்டலத்தை கிழித்துக்கொண்டு பாராசூட்டின் உதவியுடன் இறங்கியது. 

முதலில் சர்வதேச விண்வெளி மையத்திற்கு வெறும் 6 மாதங்கள் மட்டுமே ஆய்வுக்காக ரூபியோ சென்றிருந்தார். ஆனால் நிர்ணயிக்கப்பட்ட 6 மாதத்தில் ஆய்வுப்பணிகள் முடியாததால் மேலும் 6 மாதங்கள் அவர் அங்கேயே தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதன் பின்னும் கூடுதலாக இரண்டு மாதங்கள் அவர் அங்கேயே தங்க வேண்டிய தேவை ஏற்பட்டதால், மொத்தம் 14 மாதங்கள் விண்வெளியில் தங்கி அவர் சாதனை படைத்துள்ளார். சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் விண்வெளியில் 371 நாட்கள்வரை அவர் தங்கியுள்ளார். இதன் மூலமாக விண்வெளியில் அதிக காலம் தங்கியிருந்த அமெரிக்க என்ற பெருமை அவருக்குக் கிடைத்துள்ளது. 

"முதலில் ஆறு மாதம் என நினைத்து ஸ்பேஸ் ஸ்டேஷன் சென்ற நான், 14 மாதங்கள் அங்கேயே தங்க வேண்டும் என்பது முன்கூட்டியே தெரிந்திருந்தால் இதை கட்டாயம் மறுத்திருப்பேன். மீண்டும் பூமிக்கு வந்தது மகிழ்ச்சியாக உள்ளது. எனக்கு தற்போது பூமியின் புவியீர்ப்பு விசை முற்றிலும் வித்தியாசமாக இருக்கிறது" என பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். 

ஒரு ஆண்டுக்கும் மேலாக அவர் பூமியின் புவியீர்ப்பு விசையின்றி இருந்ததால், இப்படிப்பட்ட உணர்வு அவருக்கு ஏற்படுகிறது. இதன் பின்னர் சிறிது காலம் அவர் மருத்துவ பரிசோதனையில் வைக்கப்பட்டு, தன் குடும்பத்துடன் சராசரி வாழ்க்கை வாழ அனுமதிக்கப்படுவார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com