நிலவில் ஓட்டை போடும் NASA. என்ன செய்யப் போகிறார்கள்?

நிலவில் ஓட்டை போடும் NASA. என்ன செய்யப் போகிறார்கள்?
Published on

1969 ஆம் ஆண்டு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள், நிலவில் முதன்முறை கால்தடம் பதித்தார்கள். இந்த நிகழ்வு மிகப்பெரிய ஆச்சரியமாகப் பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது நிலவின் மேற்பரப்பில் மிகப்பெரிய ஓட்டை போடுவதற்கான திட்டத்தையே நாசா செயல்படுத்த இருக்கிறார்கள். 

நாசாவின் பெர்சிவரன்ஸ் ரோவர் மூலமாக கடந்த 2022 இல் செவ்வாய் கிரகத்தில் போட்ட ஓட்டை எல்லாம் ஒரு விஷயமே இல்லை எனும் அளவுக்கு, நிலவில் மிகப்பெரிய ஓட்டைகளைப் போட நாசா திட்டமிட்டுள்ளது. அதாவது மிகப்பெரிய சுரங்கமே தோண்டுவதற்கான திட்டங்களை வகுத்து வருகிறார்களாம். இது ஏன் என்ற கேள்வி பலரது மனதில் எழுந்த நிலையில், எல்லாம் எதற்காக அங்குள்ள வளங்கள் பற்றி அறியத்தான். 

இதற்கான பணிகள் அடுத்த மாதம் முதல் தொடங்க இருக்கிறது. ஒரு ட்ரில் போடும் இயந்திரத்தை முதற்கட்டமாக சந்திரனுக்கு அனுப்ப நாசா திட்ட மிட்டுள்ளது. பின்னர் படிப்படியாக 2032 ஆம் ஆண்டுக்குள், நிலவில் ஒரு மிகப்பெரிய சுரங்கத்தையே நிறுவ வேண்டும் என நாசா முடிவு செய்துள்ளது. இப்படி நிலவின் மேற்பரப்பில் உருவாக்கப்படும் சுரங்கத்தைப் பயன்படுத்தி இரும்பு, நீர் மற்றும் அரிய வகைத் தனிமங்கள் போன்ற வளங்களைப் பிரித்தெடுக்க முடியும். 

இவ்வளவு கடினமான விஷயத்தை நாசா ஏன் முயற்சிக்கிறது என்றால், முன்னதாக நிலவில் நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளின் படி நிழல் அதிகம் இருக்கும் பகுதிகளில் பல வளங்கள் நிறைந்திருப்பதை நாசா கண்டுபிடித்துள்ளது. அவற்றைப் பயன்படுத்தி, எதிர்காலத்தில் விண்வெளிப் பயணத்திற்கான எரிபொருள் தயாரிக்கலாம் என நாசா நம்புகிறது. மேலும், சீனாவின் சாங் 5 மூன் மிஷனில் கிடைத்த தனிமங்கள் போலவே, நிலவின் மேற்பரப்புக்கு கீழ் மதிப்புமிக்க உலோகங்களும், தாதுக்களும் தங்களுக்கும் கிடைக்கும் என நாசா எதிர்பார்க்கிறது. 

சீனாவின், சாங் 5 லூனார் சாம்பிள் ரிட்டன் மிஷனில், சந்திர கிரகத்தில் சேகரிக்கப்பட்ட மாதிரியை பூமிக்கு கொண்டு வந்து ஆராய்ந்த போது, அதில் புதிய வகை ஹீலியம்-3 என்ற கனிமம் கிடைத்தது. கண்டு பிடிக்கப்பட்ட கனிமம் Nuclear Fusion நிகழ்வுக்கு பயனுள்ளதாக இருக்கும் என சீனா தெரிவித்தது. முன்னதாக 2022ல் செவ்வாய் கிரகத்தில் நாசா போட்ட ஓட்டையிலிருந்து எடுக்கப்பட்டதை ஆராய்ந்த போது, அதில் ஆர்கானிக் ரிச் மெட்டீரியல் என்பது கண்டு பிடிக்கப்பட்டது. இது முந்தைய காலத்தில் அங்கே நுண்ணுயிர்கள் வாழ்ந்ததற்கான சான்றாகும் என நாசா கூறியது.  

இதைத்தொடர்ந்து தற்போது நிலவில் இவர்கள் உருவாக்கப் போகும் சுரங்கம் சார்ந்த தகவல்கள், பிரபலமாக பேசப்பட்டு வருகிறது. இது மட்டும் வெற்றிகரமாக முடிந்தால், விண்வெளி ஆராய்ச்சியில் மிகப்பெரிய மைல்கல்லாக இந்த நிகழ்வு மாற வாய்ப்புள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com