
தேசிய ஜனநாயக முன்னணியில் கூட்டம் வருகிற 18 ஆம் தேதி தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ள வருமாறு சிராக் பாஸ்வான், ஜிதன்ராம் மஞ்சித் ஆகியோருக்கு பா.ஜ.க. அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பாக பா.ஜ.க.வின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, லோக ஜனசக்தி (ராம் விலாஸ்) கட்சியின் தலைவர் சிராக் பாஸ்வானுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் புதுதில்லியில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு 9 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளது. இதையொட்டி தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. அக்கட்சிக்கு மக்களவையில் ஓர் உறுப்பினர் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு பா.ஜ.க. விடுத்துள்ள அழைப்பு பற்றி லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) யின் தலைவர் சிராக் பாஸ்வான் கருத்து கூறுகையில், 2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணயில் இருப்பது குறித்து கட்சியின் இதர தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடம் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுக்கு நாங்கள் அவ்வப்போது பிரச்னைகள் அடிப்படையில் ஆதரவு தெரிவித்து வந்துள்ளோம். எனினும் மக்களவைக்கு விரைவில் தேர்தல் வரும் நிலையில் மீண்டும் கூட்டணியில் சேருவது பற்றி கட்சித் தலைவர்களுடன் கலந்து ஆலோசித்த பிறகுதான் முடிவு செய்ய முடியும் என்று சிராக் பாஸ்வான் தெரிவித்தார்.
இதேபோல ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா தலைவர் ஜிதன்ராம் மஞ்சிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க வருமாறு ஜே.பி.நட்டா அழைப்பு விடுத்துள்ளார். ஏற்கெனவே மோடியின் 9 ஆண்டு கால ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட நல்வாழ்வு திட்டங்கள்,சாதனைகள் குறித்து கடந்த ஒரு மாத காலமாக பா.ஜ.க. நாடு தழுவிய பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த்து. இந்த கூட்டங்களில் பல முக்கிய தலைவர்களும் மத்திய அமைச்சர்களும் பங்கேற்றனர்.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் செயல்பாடுகள், நிறைவேற்றப்பட்ட வளர்ச்சித் திட்டங்கள் ஆகியவற்றை விளக்கும் வகையில் இந்த கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டு லோக் ஜனசக்தி கட்சியில் பிளவு ஏற்பட்டதை அடுத்து லோக் ஜனசக்தி ராம் விலாஸ் பிரிவுக்கு புதிய சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியிருந்தது. தற்போது மத்திய அமைச்சராக இருக்கும் பசுபதி குமார் பரஸ் தலைமையிலான லோக் ஜனசக்தி பிரிவு ராஷ்ட்ரீய லோக் ஜனசக்தி என்று அழைக்கப்படுகிறது.