இன்று (நவம்பர் 11) தேசிய கல்வி தினம்: யாருக்காக கொண்டாடப்படுகிறது தெரியுமா?

இன்று (நவம்பர் 11) தேசிய கல்வி தினம்: யாருக்காக கொண்டாடப்படுகிறது தெரியுமா?

சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களின் பிறந்த நாள் நவம்பர் 11ஆம் தேதி. பன்மொழி வித்தகரான ஆசாத் 1888 ஆம் ஆண்டு பிறந்தார். இளம் வயதில், 1923ஆம் ஆண்டு, இந்திய தேசிய காங்கிரஸின் தலைவரானார். ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் 1935ஆம் ஆண்டு ஸ்தாபித்தார். மத அடிப்படையில், இந்தியா பிளவுபடுவதை அவர் விரும்பவில்லை.

மௌலான அபுல் கலாம் ஆசாத்
மௌலான அபுல் கலாம் ஆசாத்

சுதந்திரம் அடைந்த பின், இந்தியாவின் முதல் கல்வியமைச்சராக பதவியேற்று 1958வரை பணி புரிந்தார். இந்த காலகட்டத்தில், இந்தியாவின் கல்வி முன்னேற்றத்திற்கு அவர் ஆற்றிய அளப்பரிய தொண்டிற்காக, அவருடைய பிறந்த நாள் ‘தேசிய கல்வி தினம்’ என்று 2008ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்படுகிறது.

பதினான்கு வயது வரை எல்லோருக்கும் இலவச அடிப்படைக் கல்வி, பெண்கள் கல்வி கற்பது அவசியம் ஆகியவை அவர் கல்வித்துறையில் அவர் கொண்டு வந்தவை. அவருடைய முயற்சியால், இந்தியாவின் முதல் ஐ.ஐ.டி கரக்பூரில் 1951ஆம் வருடம் தொடங்கப்பட்டது. உயர் கல்வி வளர்ச்சிக்கு, யுனிவர்சிடி க்ராண்ட்ஸ் கமிஷன் 1953ஆம் வருடம் நிறுவப்பட்டது. அவரால் துவங்கப்பட்டவை - சாகித்ய அகாதமி, சங்கீத நாடக அகாதமி, லலித் கலா அகாடமி, கலாசார உறவுக்கான இந்திய கவுன்சில் (ICCR), அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சி கவுன்சில் (CSIR) ஆகியவை. 1958ல் காலமான ஆஸாத் அவர்களுக்கு, இந்திய அரசின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ 1992ஆம் வருடம் வழங்கப்பட்டது.

மக்களிடம் கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கவும், நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் அடிப்படைக் கல்வியை கொண்டு சேர்ப்பதற்கான அவசியத்தை எல்லோரும் உணரும் படி செய்வதற்கான ஆக்கபூர்வ நடவடிக்கையை மேற்கொள்ள இந்த நாள் உதவுகிறது. இந்த நாளில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் கல்வி சம்பந்தமான மாநாடுகள், கருத்தரங்கம், கலந்துரையாடல் ஆகியவை நடத்தப்படுகின்றன.

நேரு மற்றும் மௌலான அபுல் கலாம் ஆசாத்
நேரு மற்றும் மௌலான அபுல் கலாம் ஆசாத்

ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு கல்வி முக்கிய தேவையாகிறது. வளராத நாடுகள், வளரும் நாடுகள், வளர்ந்த நாடுகள் என்று உலக நாடுகளை வகைப்படுத்தும்போது, வளராத நாடுகளில் கல்வி எல்லா மட்டத்திலும் பரவி இருக்காத தன்மையை காண முடிகிறது. வளர்ந்த நாடுகளில் எல்லோருக்கும் கல்வி, உணவு உற்பத்தியில் தன்னிறைவு, சிறந்த மருத்துவ பராமரிப்பு, அடிப்படை வசதிகளில் முன்னேற்றம் என்று எல்லா வகைகளிலும் நாடு முன்னேறுகிறது. இந்த நாடுகளில், மக்கள் சுய சிந்தனையுடன், தங்கள் தலைவர்களை தேர்ந்தெடுக்க முடிகிறது.

இப்படி சிந்தித்துப் பார்க்கும் திறன் இல்லாத வளராத நாடுகளில், நிலையான அரசு இன்றி, ஆட்சி மாற்றம் ஏற்படுகிறது. இதன் காரணத்தால் முன்னேற்றம் தடைபடுகிறது.ஒவ்வொரு வருடமும், ‘தேசிய கல்வி தினம்’ இலக்கு உண்டு. இந்த வருட இலக்கு ‘புதுமையை ஏற்றுக்கொள்ளுதல்’. மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பதற்கு புதுமை மற்றும் முற்போக்கான வழிமுறைகளைக் கண்டறிதல் என்பது இந்தாண்டுக்கான கருவாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com