
இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் சாலை விபத்துகளை தவிர்க்கும் பொருட்டு போக்குவரத்து சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு, போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது அதிகளவு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல் மற்றும் பந்தயம் மற்றும் அதிக வேகத்தில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது ரூ.5,000ம், மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் ரூ.10,000ம் புதிய போக்குவரத்து விதிகளின் படி அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் நிலுவையில் உள்ள போக்குவரத்து விதிமீறல் அபராதங்களால் அவதிப்படும் வாகன ஓட்டிகளுக்கு லோக் அதாலத் சிறிய முதல் பெரிய அபராதங்களை குறைந்த செலவில் தீர்க்க அல்லது அவற்றை ரத்து செய்ய ஒரு வாய்ப்பை வழங்க உள்ளது.
அதேசமயம், சில கடுமையான போக்குவரத்து மீறல்களில் ஈடுபட்ட வாகன ஓட்டிகள் மீது விதிக்கப்பட்ட அபராதம் பரிசீலிக்கப்படாது என்று கூறியுள்ளது. வரும் சனிக்கிழமை (செப்டம்பர் 13-ம்தேதி)நடைபெற உள்ள தேசிய லோக் அதாலத் மூலம் நிலுவையில் உள்ள போக்குவரத்து அபராதங்களுக்கு முழுமையாக தள்ளுபடி பெறலாம் அல்லது 50% வரை குறைக்கப்படும் ஒரு பொன்னான வாய்ப்பு வழங்கப்படுகிறது.
தேசிய லோக் அதாலத் நோக்கம், நீதிமன்றங்களின் பணிச்சுமையை குறைக்கவும், மக்கள் தங்கள் வழக்குகளை சமரசமாக தீர்த்துக்கொள்ளவும், வழக்குகளை விரைந்து முடிவுக்கு கொண்டு வருவதாகும். அந்த வகையில் தேசிய லோக் அதாலத் மூலம் தள்ளுபடி பெற தகுதியான போக்குவரத்து விதிமீறல்கள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
தள்ளுபடி பெற தகுதியான சிறிய போக்குவரத்து விதிமீறல்கள்:
சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுதல்
ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுதல்
ரெட் சிக்னலை மீறுதல்
தவறாக வழங்கப்பட்ட சலான்
அதிக வேகம்
பி.யூ.சி சான்றிதழ் இல்லாதது
நோ பார்க்கிங் ஏரியாவில் வாகனத்தை நிறுத்துதல்
லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுதல்
வாகன தகுதிச் சான்றிதழ் வைத்திருக்காதது
தவறான பாதையில் வாகனம் ஓட்டுதல்
போக்குவரத்து சிக்னல்களைப் புறக்கணித்தல்
நம்பர் பிளேட் இல்லாமல் வாகனம் ஓட்டுதல்
போன்ற சிறிய அளவிலான போக்குவரத்து விதிமீறல்கள் முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படலாம் அல்லது மிக குறைந்த தொகையை செலுத்தி வழக்கை முடித்துக்கொள்ளலாம்.
உதாரணமாக, ரூ.10,000 அபராதம் ரூ.2,000 ஆக குறைக்கப்படவும் வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதேசமயம், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதால் ஏற்படும் மரணம், சிறுவர்கள் வாகனம் ஓட்டுதல் மற்றும் தீவிரமான கிரிமினல் குற்றங்களுடன் தொடர்புடைய போக்குவரத்து வழக்குகள் லோக் அதாலத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.
போக்குவரத்து விதிமீறல் அபராதங்களை பொறுத்தவரை, இந்த லோக் அதாலத்தில் பங்கேற்பதால் பல நன்மைகள் உள்ளன. அதாவது தேசிய லோக் அதாலத் மூலம், வழக்கமான நீதிமன்றங்களை போல் அல்லாமல், ஒரே நாளில் உங்கள் வழக்கு மீது விசாரணை நடத்தப்பட்டு, தீர்வு காணப்படும். அதேபோல் இதில் வழங்கப்படும் தீர்ப்பு, நீதிமன்ற தீர்ப்புக்கு இணையானது என்பதாலும் இந்த தீர்ப்பு மீது மேல்முறையீடு செய்ய முடியாது என்பதாலும் வழக்கு உடனடியாக முடிவுக்கு வரும்.
உங்கள் வாகனங்களுக்கு அபராதம் இருக்கா, அப்படின்னா, நீங்க முதலில், தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் (NALSA) அதிகாரப்பூர்வ வலைத்தளமான nalsa.gov.inக்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது அதில் கேட்கப்படும் தேவையான விவரங்களை பூர்த்தி செய்து, அபராத ரசீது, வாகனத்தின் பதிவு சான்றிதழ், ஓட்டுநர் உரிமம் போன்ற ஆவணங்களை பதிவேற்றம் செய்தால் நீங்கள் விசாரணைக்கு ஆஜராக வேண்டிய நாள், நேரம், டோக்கன் போன்றவை உங்கள் மின்னஞ்சல் அல்லது மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும். விசாரணை நடைபெறும் நாளில், சந்திப்பு கடிதம், டோக்கன் மற்றும் உங்கள் வாகனம் மீதான அபராதம் தொடர்பான சலான்கன் மற்றும் தேவையான ஆவணங்களை எடுத்துச் சென்று உங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம்.