தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் தினம்... வாழ்வு பாதுகாப்புக்கு சேமிப்போமா?

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் தினம்... வாழ்வு பாதுகாப்புக்கு சேமிப்போமா?
Published on

டந்த பத்து வருடங்களுக்கு முன் இருந்ததை விட தற்போது அதிகம் முன்னேறி நம் வாழ்வின் அங்கமாக மாறியுள்ளது டெக்னாலஜி எனும் அறிவியல் முன்னேற்றம். அதில் பெருமளவு பங்கு வகிக்கிறது சேமிப்புக்கு அடிப்படை யாகும் வங்கிகள். பிள்ளைகளின் பள்ளிக்கல்வி முதல் குடும்பம் காக்கும் சேமிப்பு, உதவித்தொகைகள்  வரை பணப்பரிமாற்றங்கள் அனைத்தும் வங்கியின் வழியே நடைபெற்று வருவதை அறிவோம்.

அன்று கடுகு டப்பாவில் போடப்பட்டு சேமித்த பெண்களின் பழக்கம் இன்று அருகில் உள்ள வங்கிகளில் சேமிக்கும் அளவுக்கு வங்கிகள் அதிகம் பெருகியுள்ளது. உண்டியலுக்கும் கடுகு டப்பாகளுக்கும் அவசியமின்றி செய்து விட்டது வங்கிகள். வங்கிகளில் கணக்கு இல்லாத மக்களின் சதவிகிதம் மிகக் குறைவு. காரணம் எதிர்கால வாழ்க்கை சிறப்பானதாக அமைய உதவும் சேமிப்பு பழக்கம் மனிதர்கள் அனைவருக்கும் மிகவும் அவசியமானது. குறிப்பாக ஏழை நடுத்தர மக்களுக்கு சிறுசேமிப்பு பழக்கம் இருந்தால் மட்டுமே வாழ்க்கையை சிரமமின்றி நடத்த முடியும்.  

உலகளவில் தனியார் மற்றும் அந்தந்த நாட்டின் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் ஏராளமாக இயங்கி வருகின்றன. இதில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் சேமிப்பு பணத்தின் பாதுகாப்புக்கான உறுதியை அளிக்கும் வகையில் மக்களுக்காக சேவையாற்றிக் கொண்டிருக்கின்றனர். இந்தியாவைப் பொறுத்தவரை இந்தியன் வங்கி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி, ஆகியவை உள்ளிட்ட 12 தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் தற்போது செயல்பட்டு வருகிறது. இது மட்டுமின்றி ஏராளமான தனியார் வங்கிகளும் இருக்கின்றன. ஆனாலும் மக்கள் பாதுகாப்பு நிமித்தம் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளையே பயன்படுத்துகின்றனர்.   

நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு வரை வங்கிகள் தனியாரின் நிர்வாகத்தில்தான் இயங்கி வந்தன. ஆனால் நாட்டின் சுதந்திரத்திற்கு பிறகு 1949ல் முதன் முதலில் இந்திய ரிசர்வ் வங்கி தேசிய மயமாக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 1969 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 19 ஆம் தேதி இரவு 8:30 மணியளவில் அப்போது இந்திய பிரதமராக இருந்த இந்திரா காந்தி நாட்டின் சிறந்த 14  தனியார் வங்கிகளை தேர்ந்தெடுத்து தேசிய மயமாக்கப்படுவதாக அறிவித்தார். இதையடுத்து இதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டு ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. இதன் காரணமாகவே தற்போது 12 தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் செயல்பட்டு வருகிறது.

வங்கிகள் தேசியமயமாக்குவதற்கு முன்பு வரை வசதி படைத்தவர்கள், படித்தவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மட்டுமே வங்கிகளை பயன்படுத்தி வந்தனர். ஆனால் தேசியமயமாக்கப்பட்ட பிறகு வங்கிகள் மீதான விழிப்புணர்வும் நம்பிக்கையும் மக்களிடையே தெரிய வர அதன் பின்  ஏழை நடுத்தர மக்களும் பயன்படுத்தத் துவங்கினர்.  

வங்கிகள் மூலம் நகைக்கடன், விவசாயக் கடன், கல்விக் கடன் உள்பட பல திட்டங்கள் கொண்டுவரப்பட்டு மக்களின் வாழ்க்கை தரம் உயர வழிவகுத்தது. வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டது மக்களுக்கு பெரிதும் பயனைத் தந்தது எனலாம். நாட்டின் பொருளாதாரத்தையும் மேம்படுத்திய வங்கிகள் 1969 ஆம் ஆண்டில் தேசிய மயமாக்கப்பட்ட தினமான ஜூலை 19ஆம் தேதி தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் தினமாக ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com