நேட்டோ (NATO) இழுத்தடிப்பு - உக்ரைன் அதிபர் கடும் அதிருப்தி!

நேட்டோ (NATO) இழுத்தடிப்பு - உக்ரைன் அதிபர் கடும் அதிருப்தி!
Published on

நேட்டோவில் உக்ரைனை உறுப்பு நாடாகச் சேர்ப்பது குறித்து திட்டவட்டமான பதில் கூறாமல் இருப்பது அபத்தமானது என்று செலன்ஸ்கி கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

முப்பத்தொரு உறுப்பு நாடுகளைக் கொண்ட நேட்டோ இராணுவக் கூட்டமைப்பின் உச்சி மாநாடு, லித்துவேனியா தலைநகர் விலினியசில் இன்று தொடங்கியது. இந்த மாநாட்டில் உக்ரைனை நேட்டோவில் சேர்ப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் அதற்கான திட்டவட்டமான அறிவிப்புகளோ அறிகுறிகளோ காணப்படவில்லை.

எனினும், உக்ரைனுக்கு சாதகமான அறிவிப்பு வெளியாகும் என்றே பல நாடுகளின் அரசுத் தலைவர்களும் கூறிவருகின்றனர்.அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவனும், இந்தக் கூட்டத்தில் உக்ரைன் தொடர்பாக சாதகமான சமிக்ஞை கிடைக்கும் என்று குறிப்பிட்டிருந்தார்.

நேட்டோவின் பொதுச் செயலாளர் ஜென் ஸ்டோல்டன்பெர்க்கோ, “கீவ் (அதாவது உக்ரைன்) நேட்டோவிடமிருந்து மேற்கொண்டும் இராணுவ உதவிகளையும் பாதுகாப்பு உத்தரவாதத்தையும் பெறும். நேட்டோவில் இணைவதற்கு ஏதுவான நிலைமைகளும் உருவாக்கப்படும். இடைக்கால ஏற்பாடாக நேட்டோ- உக்ரைன் கவுன்சில் என்கிற புதிய வடிவத்தில் கூட்டமைப்பு உருவாக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.” என்று கூறியுள்ளார்.

உறுப்பு நாடுகள் அனைத்தும் தெளிவான, ஒன்றுபட்ட, சாதகமான செய்தியை வழங்கும் என தான் எதிர்பார்ப்பதாகவும், இது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு முன்னர் அவர் நம்பிக்கை தெரிவித்தார். ஆனால், உக்ரைன் அதிபர் செலன்ஸ்கிக்கு இந்த பதிலும் விளக்கங்களும் திருப்தியை அளிப்பதாக இல்லை.

நேட்டோவில் இணைவதற்கான அழைப்பை அனுப்பவோ உறுப்பினராக இணைக்கவோ குறிப்பிட்ட காலக்கெடுவை நிர்ணயிக்காமல் விட்டால், அது அபத்தமாக இருக்கும் என்றும் இது முன்மாதிரி இல்லாத ஒன்றும் என்றும் செலன்ஸ்கி காட்டமாகவே குறிப்பிட்டுள்ளார்.

நேட்டோ நாடுகளின் பல உறுதிமொழிகளுக்கு இடையில், பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரனும், தாங்கள் உக்ரைனுக்கு உதவுவதற்காக விரைவில் நீண்டதொலைவு தாக்கும் ஏவுகணைகளை தரத் தொடங்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஓராண்டுக்கும் மேல் நீடித்துவரும் ரஷ்யா- உக்ரைன் போரில், ஒரு மாதமாக உக்ரைன் தரப்பு கடும் பதில் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு உதவியாக, ”பிரான்ஸ் சார்பில் ஆயுதங்களையும் பிற இராணுவ உதவிகளையும் கூடுதலாக வழங்க முடிவுசெய்திருக்கிறேன்” என்றும் மேக்ரன் கூறியுள்ளார்.

இதனிடையே, 31 நாடுகள் இடம்பெற்றுள்ள நேட்டோவில் சுவீடனை இணைத்துக்கொள்வதற்கு துருக்கி அதிபர் எர்டொகன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com