மகளிர் மேம்பாட்டுக்காக தமிழக அரசால் தொடங்கப்பட்டது மகளிர் சுய உதவிக் குழுக்கள் திட்டம். இத்திட்டத்தின் பயனாக இன்று சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்கள் சுய தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு, வருவாய் ஈட்டி, பொருளாதார சுயசார்பு பெற்று வருகின்றனர். மகளிர் சுய உதவிக் குழுவினரின் தயாரிப்புப் பொருட்கள் அனைத்துத் தரப்பினரையும் சென்றடையும் வகையிலும், அப்பொருட்களுக்கான உரிய விலை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும், மாநில, மாவட்ட, வட்டார அளவில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிப்புப் பொருட்களின் விற்பனைக் கண்காட்சிகளை தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் நடத்தி வருகிறது.
அந்த வகையில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு சென்னை, நுங்கம்பாக்கம் அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் நவராத்திரி விற்பனைக் கண்காட்சி இன்று (07.10.2023) துவங்கியது. இக்கண்காட்சியை தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ச.திவ்யதர்சினி இ.ஆ.ப., குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து பார்வையிட்டார். இன்று தொடங்கியிருக்கும் இந்தக் கண்காட்சி, வரும் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்தக் கண்காட்சியில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் அனைத்து மாவட்டங்களிலும் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருட்களான சிறுதானியங்கள், செயற்கை ஆபரணங்கள், ஊறுகாய் வகைகள், வாழைநார் பொருட்கள், பாக்கு மட்டைப் பொருட்கள், சேலை வகைகள், பருத்தி மற்றும் பட்டுப் புடைவைகள், பாரம்பரிய உணவுப் பொருட்கள், மண்பானைகள், கைவினைப் பொருட்கள், சிறுதானிய தின்பண்டங்கள், பனை ஓலைப் பொருட்கள், பொம்மை வகைகள், மிளகு, மூலிகைப் பொருட்கள், பாரம்பரிய அரிசி வகைகள், பனை ஓலைப் பொருட்கள், ஆடை வகைகள், தேங்காய் ஓடு பொம்மைகள், மரச்சிற்பங்கள், இயற்கை சோப் வகைகள், பழங்குடியினர் தயாரிப்புப் பொருட்கள், காகிதக் கூழ் பொம்மைகள், கோரைப்பாய், சிறுதானியங்கள், எண்ணெய் வகைகள், சணல் பொருட்கள், மெழுகுவர்த்திகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களும், குறிப்பாக நவராத்திரி கொலு பொம்மைகள் விற்பனை செய்யும் அரங்குகள் என 46 அரங்குகளில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்கள் இந்தக் கண்காட்சியில் விற்பனை செய்யப்பட உள்ளன.
மேலும், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் ஆகியவற்றின் வழிகாட்டுதலின் கீழ் செயல்படும் சுய உதவிக் குழுக்கள் மற்றும் திருநங்கையர் சுய உதவிக் குழுக்களும் தங்களின் தயாரிப்புப் பொருட்களை இக்கண்காட்சியில் விற்பனை செய்ய உள்ளனர். பாரம்பரிய சுவை மிகுந்த சிறுதானிய உணவுகளை உண்டு களித்திட இக்கண்காட்சியில் ஆறு உணவு அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் இக்கண்காட்சிக்கு அனுமதி இலவசம்.