’நமது வீழ்ச்சிக்கு நாமே காரணம்’ பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்!

நவாஸ் ஷெரீப்
நவாஸ் ஷெரீப்

பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடிக்கு இந்தியாவோ அல்லது அமெரிக்காவோ காரணமில்லை என்று பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்தார். நமது வீழ்ச்சிக்கு நாமே காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கைபர் பக்டுயூன்கவா பிராந்தியத்தில் உள்ள மன்சேஹ்ரா பகுதியில் தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ள நவாஸ் ஷெரீப், கட்சித் தொண்டர்களிடையே பேசினார். இந்தியா நிலவை அடைந்துவிட்டது. ஆனால், நாம் இன்னும் தரையை விட்டே எழுந்திருக்கவில்லை என்றார்.

பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியை இப்போது சந்தித்து வருகிறது. இதற்கு இந்தியாவோ அல்லது அமெரிக்காவோ காரணமில்லை. இதற்கு நாம்தான் காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் ஷெரீப் மூன்று முறை பதவி வகித்துள்ளார். அதாவது 1993, 1999 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் அவர் பிரதமராக இருந்துள்ளார். ஆனால் மூன்று முறையும் பதவியிலிருந்து அவர் வெளியேற்றப்பட்டார். இப்போது நான்காவது முறையாக தேர்தலில் போட்டியிட அவர் திட்டமிட்டு வருகிறார்.

2013 ஆம் ஆண்டில் மின்சாரத்துக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. நாங்கள் ஆட்சிக்கு வந்து மின்பற்றாக்குறைக்கு முடிவு கட்டினோம். பயங்கரவாதத்துக்கும் முடிவு கட்டினோம். கராச்சியில் அமைதியை மீட்டெடுத்தோம். நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டன. வளர்ச்சி மற்றும் செழிப்புக்கான புதிய சகாப்தம் தொடங்கியது என்றும் நவாஸ் ஷெரீப் கூறினார்.

மருத்துவச் சிகிச்சையை காரணம் காட்டி 2019 ஆம் ஆண்டு லண்டனில் அரசியல் தஞ்சம் அடைந்த நவாஸ் ஷெரீப், இந்த ஆண்டு அக்டோபர் மாதம் பாகிஸ்தான் திரும்பினார். ஊழல் வழக்கில் 7 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நவாஸ் ஷெரீப் மருத்துவச் சிகிச்சைக்காக லண்டன் சென்றார். அதன் பிறகு அவர் தாயகம் திரும்பவே இல்லை. இப்போது பாகிஸ்தானில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் பிரிவு தலைவர் என்ற முறையில் அவர் பாகிஸ்தான் திரும்பியுள்ளார்.

சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான்கான் வரும் தேர்தலில் லாகூர், மியான்வாலி மற்றும் இஸ்லாமாபாத் தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளார். இம்ரான்கான் பிரதமராக இருந்தபோது அரசுக்கு கிடைத்த பரிசு விவரங்களை மறைத்துவிட்டதாக பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த இஸ்லாமாபாதில் உள்ள விசாரணை நீதிமன்றம், கடந்த ஆகஸ்டு மாதம் 5 ஆம் தேதி, இம்ரான்கான் குற்றவாளி என அறிவித்து அவருக்கு மூன்று ஆண்டு சிறைத்தண்டனை வழங்கியது.

இந்த தீர்ப்பின் மூலம் இம்ரான்கான் ஐந்து ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது. ஆனால், இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் இம்ரான்கான் மீது விதிக்கப்பட்ட மூன்றாண்டு சிறைத்தண்டனையை நிறுத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. ஆனாலும் வேறு சில வழக்குகள் காரணமாக இம்ரான் தற்போது சிறையில் இருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com