

பொதுமக்களின் எதிர்கால நிதித் தேவைகள் மற்றும் காப்பீட்டிற்கு பல்வேறு முதலீட்டு வாய்ப்புகளை ‘இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC)’ வழங்கி வருகிறது. இந்நிலையில் தற்போது பெண்களுக்கு என்றே பிரத்யேகமாக ‘பிமா லட்சுமி (Bima Lakshmi)’ என்ற புதிய திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது எல்ஐசி.
முதலீடு, காப்பீடு மற்றும் சேமிப்பு ஆகிய மூன்று நன்மைகளை உள்ளடக்கிய இந்தப் புதிய திட்டமானது, பெண்களின் எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மாதத்திற்கு ரூ.4,400 பிரீமியம் செலுத்தினால், ரூ.16 லட்சம் வரை பெண்களுக்கு நிதி பாதுகாப்பு கிடைக்கும். பெண்களின் கல்வி முதல் ஓய்வு காலம் வரையிலான பல்வேறு தேவைகளுக்கு ‘பிமா லட்சுமி திட்டம்’ உதவிகரமாக இருக்கும் என எல்ஐசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு அம்சங்கள் :
பிமா லட்சுமி திட்டம் பெண்களுக்கு பாதுகாப்பான சேமிப்பு மற்றும் ஆயுள் காப்பீடு பாதுகாப்பை வழங்குகிறது. இதுதவிர பிரீமியம் செலுத்தத் தொடங்கியதும், ஒவ்வொரு 2 அல்லது 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை உயிர் பிழைப்பு பலனாக ரூ.22,500 வழங்கப்படும்.
இந்தத் திட்டத்தில் தீவிர நோய் காப்பீடு மற்றும் உடல்நல காப்பீட்டு போன்ற கூடுதல் பாதுகாப்பு வசதிகளையும் சேர்த்துக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து 3 வருடங்கள் பிரீமியம் செலுத்திய பிறகு, இந்தத் திட்டத்தின் கீழ் கடன் பெறும் வசதியும், தானியங்கி காப்பீட்டு வசதியும் கிடைக்கும்.
வயது வரம்பு: 18 முதல் 50 வயது வரை.
பிரீமியம்: ரூ.4,400 (மாதந்தோறும்)
பிரீமியம் செலுத்தும் காலம்: 7 முதல் 15 ஆண்டுகள் வரை.
திட்டத்தின் முதிர்வு காலம்: 25 ஆண்டுகள்.
முதிர்வுத் தொகை: ரூ.16 லட்சம் (தோராயமாக).
ஓராண்டு பிரீமியத்தையும் மொத்தமாக செலுத்தும் போது குறிப்பிட்ட அளவில் தள்ளுபடியும் வழங்கப்படும்.
நீங்கள் 35 வயதில் பிமா லட்சுமி திட்டத்தில் முதலீடு செய்யத் தொடங்கினால், மாதத்திற்கு ரூ.4,400 என, ஓர் ஆண்டிற்கு ரூ.52,800 பிரீமியம் செலுத்த வேண்டும். 15 ஆண்டு கால திட்டத்தை தேர்வு செய்திருந்தால், மொத்தமாக நீங்கள் ரூ.7,92,000 பிரீமியம் செலுத்த வேண்டியிருக்கும்.
25 வருடத்திற்குப் பிறகு பாலிசி முடியும் போது, உங்களுக்கு சுமார் ரூ.13 லட்சம் முதிர்வுத் தொகையாக கிடைக்கும். மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படும் உயிர் பிழைப்பு பலன் ரூ.22,500 மற்றும் காப்பீட்டுத் தொகை என அனைத்தையும் சேர்த்தால் மொத்தமாக உங்களுக்கு சுமார் ரூ.16 லட்சம் கிடைக்கும்.
நீண்ட கால தேவையை எதிர்நோக்கி பாதுகாப்பான முதலீட்டை தேடும் பெண்களுக்கு, எல்ஐசி-யின் பிமா லட்சுமி திட்டம் பொருத்தமாக இருக்கும்.
வரிவிலக்கு:
பெண்கள் செலுத்தும் அனைத்து பிரீமியங்களுக்கும் வருமான வரிச் சட்டம் பிரிவு 80C இன் படி, வரி விலக்கு வழங்கப்படும்.
முதிர்வுத் தொகைக்கு பிரிவு 10 (10D) இன் படி, வரி விலக்கு பெறலாம்.
பிமா லட்சுமி திட்டம் பெண்களின் நிதி சுதந்திரம் மற்றும் எதிர்கால பாதுகாப்பிற்கு ஒரு நல்வாய்ப்பை வழங்கும் என எல்ஐசி நிறுவனம் தெரிவித்துள்ளது.