
புது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நுரையீரலில் ஊசி சிக்கியதாக அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு, காந்தத்தின் உதவியோடு அந்த ஊசியை வெளியே எடுத்து மருத்துவர்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.
நம்பர் 1ம் தேதி புது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மூக்கில் ரத்தக் கசிவு மற்றும் இருமலுடன் 7 வயது சிறுவன் அனுமதிக்கப்பட்டார். சிறுவனுக்கு என்ன பிரச்சனை என மருத்துவர்கள் கண்டறிய சோதனை செய்தபோது அவரது நுரையீரலில் 4 சென்டிமீட்டர் அளவிலான தையல் ஊசி இருந்தது தெரிய வந்தது.
இந்த ஊசி எப்படி சிறுவனின் நுரையீரலுக்கு சென்றது என யாருக்கும் தெரியவில்லை. அந்த ஊசி நுரையீரலின் சிறிய பகுதியில் சிக்கிக் கொண்டுள்ளதால் அதை அகற்றுவது மிகவும் ஆபத்தானது என மருத்துவர்கள் கூறினர். எனவே அதற்காக புதிய மருத்துவ முறையை கையாளலாம் என மருத்துவர்கள் முடிவு செய்தனர்.
நுரையீரலில் சிக்கியுள்ள ஊசியை 4 மில்லி மீட்டர் அகலம் மற்றும் 1.5 மில்லி மீட்டர் பர்மன் கொண்ட காந்தத்தைப் பயன்படுத்தி, சிறுவனின் நுரையீரலுக்குள் விட்டு ஊசியை வெளியேற்றலாம் என மருத்துவர்கள் திட்டமிட்டனர். மேலும் சிறுவனது நுரையீரலில் உள்ள ஊசி எங்கிருக்கிறது என்பதைக் கண்டறிய எண்டோஸ்கோபி பயன்படுத்தப்பட்டது.
மருத்துவர்கள் எதிர்பார்த்தது போலவே காந்தம் சிறுவனின் நுரையீரலில் இருந்த ஊசியை சரியாகப் பற்றிக்கொண்டது. பின்னர் அதை மருத்துவர்கள் வெற்றிகரமாக வெளியே எடுத்தனர். ஒருவேளை இந்த முறை வெற்றியடையாமல் இருந்திருந்தால் அவனது மார்பு பகுதியை திறந்து நுரையீரலில் அறுவை சிகிச்சை செய்தே ஊசி வெளியேற்றப்பட்டிருக்கும் என மருத்துவர்கள் கூறினர்.
எனவே பெற்றோர்கள் குழந்தைகள் விளையாட்டுத்தனமாக எதையெல்லாம் வாயில் போட்டுக் கொள்கிறார்கள் என்பதில் கவனமாக இருப்பது அவசியம். பெற்றோர்களின் கவனக்குறைவால் குழந்தைகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே குழந்தைகளை சரியாக கவனித்து, இத்தகைய மோசமான செயல்கள் நடக்காமல் பார்த்துக்கொள்வது பெற்றோர்களின் கடமையாகும்.