

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு தேசிய தேர்வுகள் முகமை நீட் தேர்வை நடத்தி வருகிறது. ஆண்டுதோறும் ஒவ்வொரு கல்வி ஆண்டு தொடக்கத்திற்கு முன் இந்த தேர்வு நாடு முழுவதும் நடத்தப்படுகிறது.
மருத்துவ படிப்பில் சேர நீட் தேர்வு கட்டாயம் என்பதால் மாணவர்கள் அதற்காக தயாராகி வருகின்றனர். நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணை கொண்டு தான் மருத்துவ படிப்பில் சேர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 2026 - 2027 ஆம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு மே 3ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது.
நீட் தேர்வு எழுத இன்று முதல் மார்ச் 8ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நீட் நுழைவுத் தேர்வு நடைபெறும். மே.3ம் தேதி பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை நீட் நுழைவுத் தேர்வு நடைபெறும்.நீட் நுழைவுத்தேர்வுக்கு www.neet.nta.nic.in என்ற இணையதளம் வாயிலாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நீட் தேர்வு தொடர்பாக முறைகேடுகளை தடுக்க மாணவ மாணவிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. எனவே மாணவிகள் அந்த விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். ஹால் டிக்கெட், எழுதுகோல் உள்ளிட்டவற்றை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். மதம், கலாச்சாரம் சார்ந்த ஆடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவ மாணவிகள் மோதிரம், வளையல், கம்மல், மூக்குத்தி, செயின், கண்ணாடி, தாயத்து, பெல்ட் அணியக்கூடாது.
உயரம் குறைந்த ஹில்ஸ் இல்லாத செருப்புகள் மட்டுமே அணிய வேண்டும். அதிக உயரம் கொண்ட ஷூக்கள், காலணிகள் ஆகியவற்றிற்கு அனுமதி இல்லை. செல்போன், கால்குலேட்டர் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்படுகிறது. நண்பகல் ஒரு மணி முதலே கடும் சோதனைகளுக்கு பிறகு மாணவ மாணவிகள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படுவர்.