சிதம்பர ரகசியத்தை மிஞ்சிய நீட் தேர்வு ரகசியம்!

சிதம்பர ரகசியத்தை மிஞ்சிய நீட் தேர்வு ரகசியம்!

கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் தங்களுக்கு தெரியும் என்று உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார். அதென்ன ரகசியம் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியிருப்பதை தொடர்ந்து, நீட் தேர்வை ரத்து செய்வதற்கான ரகசியத்தை உதயநிதி ஸ்டாலின் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

தி.மு.க பெற்ற மாபெரும் வெற்றிக்கு நீட் ரத்து பிரச்சாரமும் முக்கியமான காரணமாக இருந்ததாக அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள். கொரோனா தொற்றுப் பரவல் இருந்து சூழலிலும் பம்பரமாக சுழன்று தி.மு.கவுக்காக பிரச்சாரம் செய்த உதயநிதி ஸ்டாலின், தன்னுடைய பேச்சில் நீட் விலக்கு, மதுரைக்கு எய்எம்ஸ் போன்ற பிரச்னைகளை மையப்படுத்தி பிரச்சாரம் செய்தார். மக்கள் மத்தியிலும் பெரிய ஆதரவு கிடைத்தது.

இந்நிலையில் ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டது. தற்போது வரை நீட் தேர்வு ரத்து செய்யப்படாமல் இருப்பதாகவும், அந்த ரகசியத்தை உதயநிதி ஸ்டாலின் தெரிவிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்தார். அதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி தந்திருக்கிறார்.

அரியலூர் மருத்துவக் கல்லூரியில் அனிதா பெயரிலான நினைவரங்கத்தை திறந்து வைத்த உதயநிதி ஸ்டாலின், சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது 'நீட்' தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்குத் தெரியும் என்று குறிப்பிட்டதை, எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி, அது என்ன? என்று கேட்டு ஒவ்வொரு மேடைகளிலும் என்னை விமர்சித்து வருகிறார்.

சட்டமன்றத்தில் என்னுடைய கன்னிப்பேச்சில் 'நீட்' தேர்வை எதிர்த்து போராடி உயிரை மாய்த்துக்கொண்ட அனிதாவின் பெயரில் அரங்கம் அமைக்க வேண்டும் என்று பேசியிருந்தேன். அதை இன்று நிறைவேற்றியிருக்கிறேன். இதை பார்க்கும்போதெல்லாம் 'நீட்' தேர்வுக்காக நாம் போராடியது நிச்சயம் நினைவுக்கு வரும்.

அண்மையில் பிரதமரை சந்தித்தபோது, நான் முதலில் வைத்த கோரிக்கை 'நீட்' தேர்வு ரத்து என்பதுதான். நீட் தேர்வு நடத்தப்படவேண்டிய அவசியத்தை பிரதமர் என்னிடம் எடுத்துக் கூறினார். ஆனால், என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. 'நீட்' தேர்வை ரத்து செய்யும் வரை சட்டப் போராட்டத்தினை தி.மு.க. தொடரும் என்று கூறிவிட்டு வந்திருக்கிறேன்.

'நீட்' தேர்வு ரத்தாகும் வரை தி.மு.க. சார்பில் சட்ட போராட்டம் தொடரும். அதுதான் நான் குறிப்பிட்ட 'நீட்' தேர்வின் ரகசியம். நமது மாணவர்களின் கல்வி உரிமை மறுக்கப்படும் போது வரும் எதிர்ப்புக்குரலே அந்த ரகசியம். எந்தவித சமரசமும் இல்லாமல் நீட் தேர்வு ரத்தாகும் வரை சட்டப்போராட்டம் தொடரும் என்று உதயநிதி ஸ்டாலின் விளக்கியிருக்கிறார்.

சிதம்பர ரகசியத்தை கூட புரிந்து கொள்ள முடியும். ஆனால், நீட் தேர்வு ரகசியத்தை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லையே என்கிறார்கள், அ.தி.மு.க

தொண்டர்கள். எது எப்படியோ, நீட் எதிர்ப்பில் தி,மு.க பக்கம் நிற்பதா அல்லது பா.ஜ.க பக்கம் நிற்பதா என்று எடப்பாடிக்கு அடுத்து தலைவலி ஆரம்பித்திருப்பதாக அறிவாலய வட்டாரம் உற்சாகத்தில் இருக்கிறது

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com