அதிகாரிகள் அலட்சியத்தால் நாசமாகிப்போன கோயில் உண்டியல் பணம்!

அதிகாரிகள் அலட்சியத்தால் நாசமாகிப்போன கோயில் உண்டியல் பணம்!

பெரிய காஞ்சிபுரத்தில் உள்ளது பிரசித்திப் பெற்ற அருள்மிகு ஏலவார்குழலி அம்பிகை சமேத ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோயில். பஞ்சபூதத் தலங்களில் இது மண் தலமாக விளங்குகிறது. இந்தக் கோயிலின் உட்பிராகாரத்தில் பக்தர்கள் காணிக்கை பணத்தைச் செலுத்த வசதியாக மொத்தம் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளன.

இந்தக் கோயிலில் வழக்கமாக மூன்று மாதங்களுக்கு ஒரு முறை உண்டியல்கள் நிரம்பியதும் அதைத் திறந்து பக்தர்களிடம் இருந்து பெறப்பட்ட காணிக்கைப் பணம் எண்ணப்படுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்குப் பிறகு இன்று இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் முன்னிலையில் இக்கோயிலில் உள்ள அனைத்து உண்டியல்களையும் திறந்து பக்தர்களின் காணிக்கைப் பணத்தை எண்ணத் தொடங்கினர். அப்போதுதான், கடந்த முறை பெய்த வடகிழக்குப் பருவ மழை காரணமாக, கோயில் உண்டியல்களைச் சுற்றி தேங்கி நின்ற மழை நீரில் நனைந்து ஏராளமான 500 ரூபாய் மற்றும் 100 ரூபாய் நோட்டுக்கள் பல்லாயிரக்கணக்கில் நாசமாகி இருந்தது தெரிய வந்தது.

பொதுவாக, கோயில் உண்டியல் பணத்தை இத்தனை காலத்துக்குப் பிறகுதான் திறந்து எண்ண வேண்டும் என்ற எந்த வரையறையும் இல்லை. எப்பொழுது வேண்டுமானாலும் கோயில் அதிகாரிகளின் அனுமதியைப் பெற்று உண்டியலைத் திறந்து பக்தர்களின் காணிக்கைப் பணத்தை எண்ணிக் கணக்கிடலாம். ஆனால், கோயில் அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் பக்தர்களின் காணிக்கை பெருந்தொகைப் பணம் வீணாகிப்போய் உள்ளது.

தற்போது இந்தக் கோயிலின் செயல் அலுவலராகப் பணியில் இருப்பவர் கலைச்செல்லி. இவர் இந்தப் பொறுப்பை ஏற்று இருபது நாட்கள்தான் ஆகின்றன என்று சொல்லப்படுகிறது. இவருக்கு முன்பு இந்தக் கோயிலின் செயல் அலுவலராக வேதமூர்த்தி என்பவர் இருந்துள்ளார். ‘கோயில் அதிகாரிகளின் அலட்சியத்தாலேயே இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பே இக்கோயில் உண்டியல்களைத் திறந்து பக்தர்களின் காணிக்கைப் பணத்தை வெளியே எடுத்திருந்தால் இவ்வளவு பெரிய தொகை நாசமாகிப் போய் இருக்காது’ என்று பக்தர்களும் சமூக ஆர்வலர்களும் மிகப்பெரும் வேதனையுடன் அங்கலாய்க்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com