

"நாங்க பத்திரமா இருக்கோம்”- வெள்ளத் தாக்குதலுக்கு ஆளான நேபாளத்தில் இருந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆன்மீக சொற்பொழிவாளர் தேச மங்கையர்கரசி வீடியோ வெளியிட்டுள்ளது பலருக்கும் ஆறுதல் அளித்துள்ளது.
ஆன்மீக சொற்பொழிவாளர் தேச மங்கையர்கரசி தலைமையில் தமிழகத்தில் இருந்து கைலாஷ்–மானசரோவர் யாத்திரை சென்ற சுமார் 150 பேர் நேபாளத்தில் பாதுகாப்பாக இருப்பதாக இன்று அவர் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.
தற்போது நேபாளத்தின் சாகா (Saga) பகுதியில் 150 பேரும் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.மானசரோவர் யாத்திரைக்குச் செல்லும் வழியில் அங்கு தங்கியிருப்பதாகக் கூறியுள்ளார். மேலும் போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளதால், அங்கிருந்து வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இந்தியா திரும்புவதற்காக நேபாளம், சீனா மற்றும் இந்திய தூதரக அதிகாரிகளிடம் உதவி கேட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 26 காலை நேபாளத்தில் யாரும் எதிர்பாராத விதமாக மிகப்பெரிய இயற்கை பேரிடர் நேர்ந்தது . நேபாள–திபெத் எல்லைப் பகுதியில், குறிப்பாக ரசுவா (Rasuwa) மாவட்டம் மற்றும் ல்ஹெந்தே/போதேகோசி ஆற்றுப் பகுதிகளில் திடீரென மிகப்பெரிய நீர் மற்றும் சேறு கலந்த மிகப்பெரிய வெள்ளம் பாய்ந்தது.
வெள்ளத்துடன் சேறும், பாறைகளும், பனிப்பாறைத் துண்டுகளும் மிக வேகமாக கீழ்நோக்கி வந்ததால் வீடுகள், பாலங்கள், சாலைகள் மற்றும் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. வீடுகள் மற்றும் பிற கட்டமைப்புகளும் அடித்துச் செல்லப்பட்டன. சில பகுதிகள் முற்றிலும் சேறு மற்றும் இடிபாடுகளால் மூடப்பட்டுள்ளன
இந்த வெள்ளத்துக்கான காரணமாக இருவேறு தகவல்கள் வந்துள்ளது. முதலில் 4.4 ரிக்டர் நிலநடுக்கம் காரணமாக இருக்கலாம் என்று தகவல்கள் வெளியானது. ஆனால் பின்னர் அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் (USGS) ஆய்வு செய்ததில், நிலநடுக்கம் காரணம் அல்ல என்பது தெரியவந்தது.
இமயமலையில் சுமார் 5,200 மீட்டர் உயரத்தில் பனிப்பாறையின் ஒரு பகுதி சரிந்து, பாறை–பனி குவியல் ஆற்றை தற்காலிகமாக அடைத்தது. அந்த இயற்கைத் தடுப்பு உடைந்தபோது மிகப்பெரிய அளவில் தண்ணீரும் சேறும் கீழே பாய்ந்ததே பேரழிவுக்கு முக்கிய காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தில் சிக்கியவர்களின் உயிரிழப்பு மற்றும் மாயமானவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து மாறிய வண்ணம் உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போதையநிலவரப்படி நேபாளம் மற்றும் திபெத் பகுதிகளை சேர்த்து நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதாகவும் 1,000-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் பகுதி கைலாஷ்–மாநசரோவர் யாத்திரை மற்றும் மலையேற்றப் பயணங்களுக்கான முக்கிய வழித்தடம் என்பதால் இந்தியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக கைலாஷ் யாத்திரைக்கு சென்றவர்களில் சிலர் காணாமல் போனதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேபாளம் இமயமலை யாத்திரை குறிப்பாக கைலாயம் செல்வோருக்கான ஆன்மீக பூமி என்பதால் வெளிநாடுகளில் இருந்தும் இந்தியாவிலிருந்தும் சுற்றுலாவாசிகள் செல்வதுண்டு. இந்த வகையில் நேபாளத்தில் மட்டும் 800-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்ததாகவும் இவர்களில் ஏராளமானோர் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் யாத்திரிகர்கள் என்றும் கூறப்படுகிறது.
குறிப்பாக 178 இந்தியர்கள், 127 நேபாளிகள் உள்ளிட்ட 644 பேரைக் காணவில்லை என நேபாள சுற்றுலா வாரியத்தின் அதிகாரபூர்வ தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதில் மாற்றம் நிகழும் வாய்ப்பு இருப்பதாகவும் அஞ்சப்படுகிறது.
இந்தப் பேரழிவு நேபாளத்தையும் திபெத்தையும் இணைக்கும் முக்கியப் பாதையையும் கடுமையாக பாதித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக பல பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழகத்தைச் சேர்ந்த குறிப்பாக ஈஷா யாத்திரிகர்கள் சிலர் மாயமான நிலையில் அவர்களை தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டதாகவும் தகவல்கள் வந்துள்ளதால் அங்கு சென்றிருக்கும் யாத்ரீகர்கள் நிலை என்ன என்பது குறித்து கவலை எழுந்துள்ளது.
இந்நிலையில் தான் அங்கு சென்றுள்ளவர்கள் அளிக்கும் தகவல்கள் முக்கியத்துவம் பெறுகிறது. அதில் ஒன்று தான் தேசமங்கையர்கரசி பேசிய வீடியோவும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆன்மீக சொற்பொழிவாளர் தேசமங்கையர்கரசி தலைமையிலான 150 பேர் கொண்ட குழு, 2026-ம் ஆண்டு ஆகஸ்ட் 17 மற்றும் 18-ம் தேதிகளில் இரண்டு குழுக்களாக சென்னையிலிருந்து புறப்பட்டு, நேபாளத்தின் காத்மாண்டுவை சென்றடைந்ததாக அவர் வெளியிட்ட வீடியோவில் தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 20: நேபாள–திபெத் எல்லையை கடந்து யாத்திரை தொடர்ந்தனர்.பின்னர் கைலாய–மானசரோவர் யாத்திரையை மேற்கொண்டனர் என்றும் தெரிகிறது. தற்போது 148 தமிழர்கள் மற்றும் 2 வெளிநாட்டினர் என 150 பேரும் பாதுகாப்பாக சாகா பகுதியில் பாதுகாப்பாக இருப்பதாக தேசமங்கையர்கரசி தெரிவித்தார்.
இந்த வீடியோ மூலம் தேசமங்கையர்கரசி மற்றும் குழுவினர் தற்போது பாதுகாப்பாக இருப்பதை அறிகிறோம். எனினும் அவர்கள் நாடு திரும்புவதற்கான போக்குவரத்து ஏற்பாடு முக்கிய சவாலாக இருக்கும் என்பதையும் கவனிக்க வேண்டும்.
காரணம்.நேபாள ராணுவம், காவல்துறை உள்ளிட்ட மீட்புக் குழுக்கள் ஹெலிகாப்டர்கள், ட்ரோன்கள் மற்றும் தரைவழி குழுக்கள் மூலம் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளன. மோசமான வானிலை, துண்டிக்கப்பட்ட சாலைகள் மற்றும் பாலங்கள் காரணமாக மீட்புப் பணி கடினமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சமயத்தில் நாம் அனைவரும் நேபாள மக்கள் மற்றும் அங்கு இருக்கும் மக்களுக்கு பக்கபலமாக இருப்பதே நமது கடமை.