
ஹமாஸ் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ள பிணைக் கைதிகளை விடுவிக்க ரகசிய பேரம் நடந்து வருவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சம்மின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். எனினும் இது தொடர்பான விவரங்களைத் தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.
அமெரிக்க ஊடகத்துக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஞாயிற்றுக்கிழமை பேட்டியளித்தார். அப்போது அவரிடம் பிணைக் கைதிகளை விடுவிக்க பேரம் நடந்து வருகிறதா என்று கேட்டதற்கு, ஒரு புறம் தரைத்தாக்குதலுக்கு நாங்கள் தயாரானாலும் பிணைக் கைதிகளை விடுவிக்க ரகசிய பேரம் நடந்து வருவது உண்மைதான். ஆனால், அதன் விவரங்களைத் தெரிவிக்க முடியாது என்று கூறினார்.
ஹமாஸ் தீவிரவாதிகள் வசம் தற்போது 239 பேர் பிணைக் கைதிகளாக உள்ளனர். அவர்களை மீட்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். இது தொடர்பாக பேரம் நடந்து வருகிறது. ஆனால், அதன் விவரங்களை இப்போது வெளியிட்டால் அவர்களை விடுவிப்பதற்கான வாய்ப்புகள் பாதிக்கப்பட்டு விடும்.
மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவர், காசாவில் சண்டை நிறுத்தம் தேவை என்ற அமெரிக்காவின் நிலைப்பாட்டை நாங்கள் ஏற்கவில்லை. முதலில் பிணை கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்பதுதான் இப்போது முக்கியமானதாகும் என்று நெதன்யாகு தெரிவித்தார்.
எனினும் பிணைக் கைதிகள் விடுவிக்கப்படாமல் இருப்பதற்கு நெதன்யாகுதான் காரணம் என்று காசாவில் உள்ள பாலஸ்தீன அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பிணைக் கைதிகளை விடுவிப்பது தொடர்பாக ஒரு உடன்பாடு எட்டப்படாமல் இருப்பதற்கு அவரே காரணம் என்றும் பெயர் குறிப்பிட விரும்பாத அந்த அதிகாரி குறிப்பிட்டார்.
பிணைக் கைதிகளைப் பற்றி அவர் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அதைவிட அவருக்கு அரசியல் எதிர்காலம்தான் முக்கியமானது போல் தெரிகிறது என்றும் அந்த அதிகாரி கூறினார். இது தொடர்பான மேல் விவரங்களைத் தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.
பிணைக் கைதிகளை விடுவிப்பது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் ரகசிய பேச்சு நடந்து வருவதை வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு கவுன்சிலி செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பியும் உறுதிப்படுத்தினார்.