அகதிகள் விவகாரத்தால் பதவி விலகிய பிரதமரைத் தெரியுமா?

அகதிகள் விவகாரத்தால் பதவி விலகிய பிரதமரைத் தெரியுமா?
Published on

ரோப்பிய நாடான நெதர்லாந்தில் அகதிகளை அனுமதிப்பது தொடர்பான விவகாரத்தால், பிரதமர் மார்க் ருட்டே தன் பதவியிலிருந்து விலகியுள்ளார்.

சுதந்திரம், ஜனநாயகத்துக்கான மக்கள் கட்சியின் தலைவரான ருட்டே, நான்கு கட்சிகள் இணைந்த கூட்டணி ஆட்சியின் தலைவராக இருந்துவந்தார். நாட்டின் மிக அதிக காலம் பிரதமர் பதவியில் இருந்தவர் என்ற பெயரையும் கடந்த ஆண்டு இவர் பெற்றிருந்தார்.

நாட்டில் அதிகரித்துவரும் அகதிகள் பிரச்னையில் ஆளும் கூட்டணியின் நான்கு கட்சிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் உடன்பாடு ஏற்படாத காரணத்தால் தான் பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக இன்று தி ஹேக் நகரில் ருட்டே அறிவித்தார்.

ருட்டே பதவி விலகியதை அடுத்து இந்த ஆண்டின் இறுதிக்குள் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடத்தப்படும். அடுத்த ஆட்சி வரும்வரை இதே அரசாங்கம் பராமரிப்பு அரசாங்கமாகத் தொடரும். ருட்டே விலகியதுதான் தாமதம்; உடனே தேர்தலை நடத்தவேண்டும் என எதிர்க்கட்சிகள் பலவும் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளன.

சுதந்திரத்துக்கான கட்சியின் தலைவர் கீர்ட் வில்டர்ஸ், தேர்தலை விரைவுபடுத்த வேண்டும் என ட்விட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார். நேர் மாறான இடதுசாரி பசுமைக் கட்சியின் தலைவர் ஜெஸ்ஸி க்ளாவரும் இதை வலியுறுத்தியுள்ளார். “நாடு இப்போதைக்கு ஒரு மாற்றத்தை விரும்புகிறது. அதுவே தேவை.” என்று அவர் கூறியிருக்கிறார்.

புதன், வியாழன் இரண்டு நாள்களுமாகத் தொடர்ந்து கூட்டணிக் கட்சிகளின் பேச்சுவார்த்தையில், முடிவு எட்டப்படுவதற்கான அறிகுறிகளே ஏற்படவில்லை. ருட்டே சார்ந்துள்ள சுதந்திரம்- ஜனநாயகத்துக்கான மக்கள் கட்சி, டி 66, கிறித்துவர் ஒற்றுமை கட்சி, கிறித்துவ ஜனநாயகவாதிகள் கட்சி ஆகியவையே கூட்டணி ஆட்சியில் இடம்பெற்று இருந்தன. ருட்டேவின் விலகலால் இக்கூட்டணியின் 18 மாத ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.

அகதிகள் விவகாரத்தில் வேறு நாடுகளில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு தஞ்சம் புகுந்து அடைக்கலம் கேட்போரின் எண்ணிக்கை உள்நாட்டுச் சிக்கல்களை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, நெதர்லாந்தில் இதனால் கடுமையான சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது என அரசுத் தரப்புகள் வெளிப்படையாகவே கூறியுள்ளன.

ருட்டே அரசாங்கம் சில மாதங்களாகவே அடைக்கலம் கேட்போரின் எண்ணிக்கையைக் குறைப்பதில் தீவிரமாக ஈடுபட்டு வந்தது. உள்நாட்டு மோதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்காலிகமாகவும், நாடு திரும்பினால் உயிர்போய்விடும் எனும் நிலையில் உள்ளவர்களுக்கு நிரந்தரமாகவும் அடைக்கலம் தருவது என உத்தேசமான கருத்தை அரசு முன்வைத்தது. மேலும், அடைக்கலம் அடைந்தவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு அகதி அந்தஸ்து தருவதையும் குறைக்கவும் ருட்டே அரசாங்கம் உத்தேசித்திருந்தது.

கடந்த 2022ஆம் ஆண்டில் மட்டும் 21,500 பேர் ஐரோப்பா அல்லாத பகுதிகளில் இருந்து இந்த நாட்டில் அடைக்கலம் கோரியிருந்தனர். பத்தாயிரக்கணக்கானவர்கள் படிப்புக்காகவும் வேலைக்காகவும் நெதர்லாந்தில் இருக்கும் நிலையில், அகதிகளுக்கான வீடு, உதவித்தொகை போன்றவற்றை வழங்குவதில் அரசுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.

அகதிகளாக இந்த நாட்டுக்குச் செல்லும் நபர்களுக்கு உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அரசு குடியிருப்பு வசதியையும் செய்து தருகிறது. இதற்கான சட்டத்தைக் கொண்டுவரவும் ருட்டே அரசாங்கம் முயன்று வந்தது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com