சென்னையில் புதிய பீச்!

சென்னையில் புதிய பீச்!
Published on

சென்னை மாநகரில் மெரினா பீச், திருவான்மியூர் பீச் மற்றும் எலியட்ஸ் பீச் என மூன்று பிரபல கடற்கரைகள் உள்ளன. இவற்றில் உலகின் இரண்டாவது பெரிய கடற்கரையாக விளங்குகிறது மெரினா பீச். சென்னை நகரின் முக்கிய அடையாளமாக விளங்கும் மெரினா பீச்சை கடந்த சில மாதங்களாக சர்வதேச தரத்துக்கு மாற்றுவதற்கான பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, இங்கு பல புதிய சுற்றுலா அமைப்புகளை உருவாக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

சென்னை கடற்கரையை ஒட்டி மக்கள் பயன்படுத்தாத பல்வேறு கடற்கரை பகுதிகளும் உள்ளன. அவை குப்பை கொட்டும் இடங்களாகவும் மீனவர்கள் மட்டும் பயன்படுத்தும் பகுதிகளாகவும் இருந்து வருகின்றன. இதுபோன்ற பகுதிகளை சுத்தம் செய்து, பயன்படுத்தத் தொடங்கினால் பொழுதுபோக்குக்காக வரும் மக்கள் வரத்து இங்கே அதிகமாவதோடு, சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். அதன்படி காசிமேடு பகுதியில் மக்களின் பயன்பாட்டில் இல்லாமல் இன்றி இருக்கும் கடற்கரை பகுதியைச் சுத்தம் செய்ய சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதற்காக அடுத்துவரும் நாட்களில் காசிமேடு மற்றும் திருவொற்றியூர் பாரதி நகர் இடையே உள்ள கடற்கரை பகுதியை சுத்தம் செய்து, அழகுபடுத்த உள்ளனர். பிறகு இதை மக்கள் பயன்படுத்தும் வகையில் சுற்றுலாக் கடற்கரையாக மாற்றவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

இப்பகுதியில் தற்போது பழைய படகுகள் மட்டுமே நிறுத்தப்பட்டு உள்ளன. இங்கே நடைமேடை அமைப்பது, மண் பகுதியை சுத்தம் செய்வது, விளக்குகளை போடுவது, அலங்கார அமைப்புகளை ஏற்படுத்துவது போன்ற பணிகளைச் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் மக்களின் பொழுதுபோக்குக்கான புதிய கடற்கறையாக இது சென்னை மக்களுக்குக் கிடைக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல், சென்னையில் சாட்டிலைட் பீச் ஒன்றையும் உருவாக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக மெரினா பீச் இணைப்பு சாலையில் இருக்கும் பயன்படுத்தப்படாத பகுதிகளை சென்னை பெருநகர மாநகராட்சி கழகம் சுத்தம் செய்து வருகிறது. அங்குள்ள குப்பைகளை அகற்றி, பயன்பாட்டில் இல்லாத பகுதிகளைப் புனரமைத்து வருகிறது. அதாவது, நொச்சி குப்பம், டுமிங் குப்பம் போன்ற பகுதிகளில் உள்ள மெரினாவின் வடக்கு பகுதியை சுத்தம் செய்து வருகின்றனர். மெரினா கடற்கரைக்குக் கொடுக்கப்பட்டு வந்த முக்கியத்துவம் முன்பு இந்தப் பகுதிகளுக்குக் கொடுக்கப்படாமல் இருந்தது.  இந்தப் பகுதியை தற்போது துணை பீச், அதாவது ‘சாட்டிலைட் பீச்’சாக உருவாக்க சென்னை, மாநகராட்சி முடிவு செய்து உள்ளது.

அதேபோல், சென்னை மெரினா பீச்சில் இருந்து கோவளம் வரை இருக்கும் பகுதிகளையும் புனரமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இப்பகுதிகளில் புதிய சுற்றுலா தளங்களை அமைப்பது, நீர் விளையாட்டுகளை உருவாக்குவது, புதிய பூங்காக்களை உருவாக்குவது மற்றும் பொதுமக்கள் வாக்கிங், ஜாக்கிங், சைக்கிளிங் போன்றவற்றை மேற்கொள்ள ஏதுவான வசதிகளை ஏற்படுத்துவதற்கான பணிகளைச் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னைக்கு புதிய கடற்கரை மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்டுவரும் சென்னை மாநகராட்சியின் புதிய திட்டத்தினால் பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சியில் உள்ளனர்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com