
பொதுவாக பள்ளிகளில் உள்ள வகுப்பறைகளில் பெஞ்சுகள் வரிசையாக போடப்பட்டு அதில் மாணவ, மாணவிகளை உட்கார வைக்கப்படுவது தான் வழக்கம். முதல் வரிசை, 2-ம் வரிசை, 3-ம் வரிசை என தொடர்ந்து பெஞ்சுகள் போடப்பட்டு இருக்கும். அதில் மாணவர்கள் வரிசையாக அமர்ந்து பாடங்களை கவனிப்பார்கள். இதில், உயரமான மாணவர்கள் கடைசி பெஞ்சிலும், உயரம் குறைந்த மாணவர்கள் முதல் பெஞ்சிலும் அமர வைப்பது பொதுவான ஒன்றாகும்.
அதுமட்டுமின்றி படிப்பில் சிறந்து விளங்கும் மாணவர்களை முன்வரிசையிலும், படிப்பில் பின்தங்கிய மாணவர்களை கடைசி வரிசையிலும் அமர வைக்கப்படுவது வழக்கமாக உள்ளது. இதுதான் காலம்காலமாக நடந்தும் வருகிறது. இத்தகைய வரிசை முறை என்பது மாணவர்கள் மத்தியில் வேறுபாடுகளை ஏற்படுத்துவது வழக்கமாகி விட்டது.
இந்த நிலையில், பள்ளி வகுப்பறைகளில் பெஞ்ச் இருக்கும் அமைப்பை மாற்றி அமைக்க அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அவர் அனுப்பியுள்ளார்.
குறிப்பாக, தற்போதைய வகுப்பறை அமைப்பு ஆசிரியர்கள் பாடம் நடத்துவதை மாணவர்களால் சரிவர கவனிக்க முடியாத சுழலும், மாணவர்கள் ஓழுங்காக பாடத்தை கவனிக்கிறார்களா என்பதை அறிந்து கொள்ள முடியாத சூழலும் இருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
எனவே, மாணவர்களின் கற்றலை மேம்படுத்தும் வகையிலும், ஆசிரியர்-மாணவர் மற்றும் மாணவர்-மாணவர் இடையேயான தொடர்பை ஊக்குவிக்கும் வகையிலும், வகுப்பறைகளில் ‘ப’ வடிவ (U-shape) இருக்கை வசதியை அமல்படுத்துமாறு பள்ளிக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
இந்த அமைப்பின் மூலம், ஒவ்வொரு மாணவரும் பலகையையும் ஆசிரியரையும் தெளிவாகப் பார்க்க முடியும் என்றும் இதன் மூலம் கற்றலில் மாணவர்களின் ஆர்வம் அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த முறையின் மூலம் மாணவர்கள் அதிக ஈடுபாட்டுடன் கல்வி கற்க முடியும் என்றும், தனிமைப்படுத்தப்படாமலும் உணர்வார்கள் என்றும் கூச்ச சுபாவமுள்ள மாணவர்கள் கூட இந்த வட்டமான, உள்ளடக்கிய அமைப்பில் பங்கேற்க வாய்ப்புள்ளது என்றும் அவர் கூறினார். புதிதாக வரவுள்ள நடைமுறையின் மூலம், தமிழகத்தில் பல ஆண்டுகளாக செயல்பாட்டில் இருந்து வந்த பள்ளி வகுப்பறை அமைப்பு தற்போது முடிவுக்கு வரஉள்ளது.
இந்த நிலையில், 'ப' வடிவில் பள்ளி இருக்கைகள் மாற்றப்படுவது குறித்து அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி விளக்கம் அளித்துள்ளார். அதில், ‘அனைவரும் சமம் என்பதை பள்ளியிலேயே மாணவர்களுக்கு புரியவைக்க வேண்டும் என்பதற்காகவும், மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தவும், மாணவர்களிடையே முன்வரிசை, பின்வரிசை என்ற பாகுபாட்டை தவிர்க்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
முதற்கட்டமாக அனைத்து பள்ளிகளிலும் பரிசோதனை முறையில் 'ப' வடிவ இருக்கை முறை மாற்றம் செய்யப்படும் என்றும் அதன் பின்னர் சதக, பாதகங்கள் அறியப்பட்டு இம்முறை பின்பற்றலாமா என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இந்நிலையில் 'ப' வடிவ பள்ளி இருக்கை முறையை மையமாக வைத்து இயக்குனர் வினேஷ் விஸ்வநாத் இயக்கிய 'ஸ்தானார்த்தி ஸ்ரீகுட்டன்'(Sthanarthi Sreekuttan) மலையாளப்படம், கடந்தாண்டு வெளியாகி கேரளாவில் பெரும் வரவேற்றை பெற்றது. அரைவட்ட வடிவில் இருக்கைகள் போடப்பட்ட வகுப்பறையில் ஆசிரியர் நடுவில் நின்று அனைத்து மாணவர்களையும் நேரடியாக பார்த்து பாடம் நடத்தும் கருத்து இந்த படத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த படம் வெளியாகி மாணவர்களின் பெஞ்ச் இருக்கை அமைப்பு தொடர்பான காட்சிகளுக்கும், அது வலியுறுத்தும் கருத்துக்கும் வரவேற்பு கிடைத்ததுடன், கேரளாவில் இதுவரை 11 பள்ளிகளில் ‘ப’ வடிவ பெஞ்ச் முறை மாற்றப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிகளிலும் இந்த முறையை நடைமுறைப்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.