

ரயில் போக்குவரத்திற்கு அடுத்தபடியாக, பொதுமக்கள் பேருந்து போக்குவரத்தையே அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். தொலைதூரப் பயணங்களுக்கு ரயில் டிக்கெட் கிடைக்காத பட்சத்தில், பலருக்கும் பேருந்து போக்குவரத்தே உதவியாக இருக்கிறது.
பேருந்தில் பயணிக்கும் பெண்களுக்கு பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை ஏற்படுத்தியுள்ளது தமிழ்நாடு போக்குவரத்து கழகம். ஒருவேளை பேருந்து பயணத்தின் போது பெண்கள் அசௌகரியமாக உணர்ந்தால், அவர்களுக்கு உடனடியாக உதவ தமிழ்நாடு போக்குவரத்து கழகம், தற்போது ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த வசதி என்ன என்பதை பெண்கள் அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.
நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் இன்றைய சூழலில், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் தமிழக அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது. இதற்காக பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
அவ்வகையில் தற்போது நீண்ட தூரம் பயணிக்கும் பெண்களுக்கு பேருந்தில் பல்வேறு பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இருப்பினும் பெண்கள் பாதுகாப்பான சூழ்நிலையை பேருந்தில் உணரத் தவறும் பட்சத்தில், அதாவது அசௌகரியமாக உணர்ந்தால் உடனடியாக பேருந்தில் இருக்கும் ‘PANIC’ என்ற பட்டனை அழுத்த வேண்டும் என தமிழக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
இந்த பட்டன் அழுத்தப்பட்டதும், அருகில் இருக்கும் கண்ட்ரோல் ரூமிற்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்படும். பிறகு போக்குவரத்து துறை அதிகாரிகள் பேருந்தின் லொகேஷனை ட்ராக் செய்து, அசௌகரியமாக உணர்ந்த பெண்ணிற்கு என்ன பிரச்சினை என்பதைக் கண்டறிந்து, உரிய நடவடிக்கைகளை எடுப்பர்.
தொழில்நுட்ப வசதிகள் அதிகரித்து விட்ட இன்றைய காலகட்டத்தில், பேருந்துகளின் லொகேஷனை எளிதாக கண்டறிய முடியும். சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் மாநகர பேருந்துகளின் லொகேஷனை கூட மொபைல் செயலிகளில் பொதுமக்களால் காண முடியும்.
அவ்வகையில் VLTD (Vehicle Location Tracking Device) என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, தற்போது பேருந்தின் லொகேஷனை நொடிக்கு நொடி தெரிந்து கொள்வதோடு, பாதுகாப்பாற்ற சூழல் நிலவும் போது பெண்களுக்கு உதவவும் தமிழக போக்குவரத்து துறை இந்த புதிய வசதியைக் கொண்டு வந்துள்ளது.
VLTD தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட புகையில்லா 16 பேருந்துகளின் சேவை, நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகமண்டலத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பெண்களின் பயணம் பாதுகாப்பானதாக மாறும் என தமிழக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
இந்த புதிய வசதி படிப்படியாக அனைத்து மாவட்டங்களிலும் கொண்டு வரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகன இருப்பிட கண்காணிப்பு சாதனம் (VLTD) என்பது இந்தியாவில் பொது சேவை மற்றும் வணிக வாகனங்களில் பயன்படுத்தப்படும் ஒரு பாதுகாப்பு அம்சமாகும். இது AIS-140 தரநிலைகளுக்கு ஏற்ப இயங்குகிறது. இது வாகனத்தின் நிகழ்நேர கண்காணிப்பு மற்றும் SOS செயல்பாட்டை வழங்குகிறது. மேலும் இந்தத் தொழில்நுட்பம் Parivahan போர்ட்டலுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.