வள்ளுவர் கோட்டம் சந்திப்பில் அமைய உள்ள புதிய மேம்பாலம்!

வள்ளுவர் கோட்டம் சந்திப்பில் அமைய உள்ள புதிய மேம்பாலம்!

சென்னை மாநகரின் மிக முக்கியமான சந்திப்பாக உள்ளது  வள்ளுவர் கோட்டம் நான்கு முனை சாலை. ஒரு பக்க சாலை தியாகராய நகரையும், இன்னொரு பக்க சாலை அண்ணா சாலையைம், மற்றொரு பக்க சாலை கோடம்பாக்கத்தையும், மற்றுமொரு சாலை நுங்கம்பாக்கத்தையும் இணைக்கிறது. போக்குவரத்து மிகுந்த இந்த சாலைகளில் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சிரமத்தைச் சந்தித்துச் செல்கின்றன.

இந்த சந்திப்பில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக, 98 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய மேம்பாலம் அமைக்கப்படும் என்று கடந்த சட்டப் பேரவைக் கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு அறிவித்து இருந்தார். அதன்படி, சென்னை வள்ளுவர் கோட்டம் சந்திப்பில் 570 மீ. நீளத்துக்கு புதிய மேம்பாலம் கட்ட தமிழக அரசு உத்தரவிட்டு இருக்கிறது. இந்த மேம்பாலம் பாம்குரோவ் ஹோட்டலின் முன்பு தொடங்கி, கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் முடிவடையும் வகையில் அமையப்போவதாகக் கூறப்படுகிறது. வடபழனி, கோயம்பேடு மேம்பாலம் போன்று நான்கு வழிகள் கொண்ட மேம்பாலமாக இது அமையவிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இதன்படி, வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலையில் இருந்து வரும் வாகனங்கள் நேரடியாக உத்தமர் காந்தி சாலைக்கு சென்று சேரும் வகையில் அமைய உள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படி அமைந்தால் சென்னை அண்ணா சாலை வரை போக்குவரத்துத் தடையின்றி வாகனங்கள் செல்ல எளிதாக இருப்பதோடு, போக்குவரத்து நெரிசலும் கணிசமாக குறையும். இந்த மேம்பாலப் பணிக்காக நில எடுப்பு மற்றும் கட்டுமானத்துக்காக 195 கோடி ரூபாய்க்கு நிர்வாக அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்து இருக்கிறது. இதன்படி, மேம்பால கட்டுமானப் பணிகளுக்கு 67.16 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக அரசு அறிவித்து உள்ளது.

மேலும், இந்த மேம்பாலத்துக்கான நில எடுப்பு பணிகளுக்கு 113.19 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேம்பாலம் கட்டுமானப் பணிகளுக்காக 8014 ச.மீ. அரசு நிலம் மற்றும் 2883 ச.மீ. தனியார் நிலம் தேவை என்று கண்டறியப்பட்டு இருக்கிறது. மேம்பாலப் பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டதால் விரைவில் நில எடுப்பு பணிகளும் தொடங்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com