மகராஷ்டிராவில் மாறும் காட்சிகள் :ஷிண்டேவுக்கு பதிலாக முதல்வராகிறாரா அஜித்பவார்?

மகராஷ்டிராவில் மாறும் காட்சிகள் :ஷிண்டேவுக்கு பதிலாக முதல்வராகிறாரா அஜித்பவார்?

மீபத்தில் பா.ஜ.க கூட்டணியில் இணைந்துள்ள அஜித் பவாருக்கு நிதியமைச்சக பொறுப்பு கிடைத்திருக்கிறது. கட்சிக்கு துரோகம் செய்துவிட்டு வெளியேறியதாக விமர்சிக்கப்பட்டு வந்த நிலையில் அஜித் பவார், சரத் பவாரை சந்தித்து ஆசி பெற்றிருக்கிறார். இந்நிலையில் கூடிய சீக்கிரம் ஷிண்டேவை அனுப்பிவிட்டு அஜித்பவாரை முதல்வராக்க பா.ஜ.க முடிவெடுத்திருப்பதாக சிவசேனாவின் சர்ச்சைக்குரிய எம்.பியான சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

சென்ற ஆண்டு, உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா அரசை கவிழ்த்து, ஷிண்டே தலைமையில் தனியாக பிரிந்து பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்து, ஒரு புதிய அரசு உருவாக்கப்பட்டது. அதே பாணியில் சரத் பவார் கட்சியிலிருந்து வெளியேறிய அஜித் பவார் பா.ஜ.க கூட்டணியில் இணைந்து துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.

சிவசேனா, தேசியவாத கட்சி என இரண்டு கட்சிகளும் இரண்டாக பிளக்கப்பட்டு பா.ஜ.க கூட்டணியில் இணைந்திருப்பதால் மகராஷ்டிராவில் எதிர்க்கட்சிகள் வலுவிழந்திருக்கின்றன.  ஆட்சியை தன் கைப்பிடிக்குள் வைத்திருப்பது, அதே நேரத்தில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் சேர்ந்துவிடாமல் தடுப்பது என்பதை மகராஷ்டிரா பா.ஜ.க ஒரு யுக்தியாகவே வைத்திருக்கிறது.

சமீபத்தில் ஷிண்டே அமைச்சரவையில் சேர்ந்த அஜித் பவாருக்கு நிதித் துறை ஒதுக்கப்பட்டிருககிறது. தனஞ்செய் முண்டேவுக்கு வேளாண்துறையும், திலீப் வால்சே பாட்டீலுக்க கூட்டுறவுத்துறையும் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள உத்தவ் தாக்கரே அணியைச் சேர்ந்த எம்.பியான சஞ்சய் ராவத், அஜித் பவார் முதல்வராகிவிடுவார் என்று நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

ஓராண்டாகியும் ஷிண்டே தலைமையிலான ஆட்சி, பா.ஜ.க தலைமைக்கு திருப்தியளிக்கவில்லை என்று செய்திகள் வந்துள்ளன. ஷிண்டேவிடமிருந்து விலகி, அஜித் பவாரிடம் நெருக்கம் காட்ட ஆரம்பித்துள்ள பா.ஜ.கவின் ஆலோசனைப்படியே அஜித் பவார், சரத் பவார் சந்திப்பு நிகழ்ந்திருப்பதாகவும் தெரிகிறது.  நாடாளுமன்றத் தேர்தல் வரை ஷிண்டே, அஜித் பவார் என இரு தரப்பையும் தன்னுடைய பக்கம் வைத்திருக்கவே பா.ஜ.க விரும்புகிறது.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னரே மகராஷ்டிராவில் ஷிண்டே அரசு கவிழ்வதற்கு அனைத்து சாத்தியங்களும் இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். குறிப்பாக உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கின் தீர்ப்பு, ஷிண்டேவின் எதிர்காலத்தை முடிவு செய்யும் என்கிறார்கள். 16 எம்.எல்.ஏக்கள் மீதான தகுதி நீக்க வழக்கு, ஷிண்டேவுக்கு எதிராக சென்றால் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்கிறார்கள்.

சிவசேனா கட்சியின் தலைமை கொறடாவாக இருந்த சுனில் பிரபு, அதிருப்தி அணியை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே உள்பட 16 எம்.எல்.ஏ.க்களை கட்சி தாவல் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு கடிதம் அளித்திருநதார். இது தொடர்பான பல்வேறு வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தன.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் மனுக்கள் மீதான தீர்ப்பில் தகுதி நீக்கம் செய்ய மறுத்த உச்சநீதிமன்றம், சட்டமன்ற சபாநாயகரே முடிவு செய்யும்படி வலியுறுத்தியது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்துவதற்கு சட்டமன்ற சபாநாயகர் காலம் தாழ்த்தி வருவதாக உத்தவ் தாக்கரே அணி தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தது.

இந்நிலையில் தகுதி நீக்க நோட்டீஸ் குறித்து ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இதனால் 16 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க விவகாரத்தில் மகராஷ்டிரா சட்டமன்ற சபாநாயகர் ராகுல் நர்வேகர் நடவடிக்கை எடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். எந்த முடிவாக இருந்தாலும் அது ஷிண்டே அரசுக்கு பெரும் பின்னடைவை கொண்டு வரும் என்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com