
இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி) கௌஹாத்தியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், அமெரிக்காவின் ஓஹியோ மாநில பல்கலைக்கழகத்துடன் இணைந்து, நீருக்கடியில் காற்று-நீர் இடைமுகத்தில் செயல்படும் ஒரு புதுமையான அதிர்வு சென்சாரை உருவாக்கியுள்ளனர்.
இந்த சென்சார் தானியங்கி மற்றும் தொடர்பற்ற குரல் அங்கீகாரத்தை செயல்படுத்தி, குரல் குறைபாடுள்ளவர்களுக்கு புதிய தகவல்தொடர்பு முறையை வழங்குகிறது.
இந்த ஆராய்ச்சி, ஒருவர் பேச முயலும்போது வாயிலிருந்து வெளியேறும் காற்றை அடிப்படையாகக் கொண்டது. குரலை உருவாக்க முடியாதவர்கள் கூட, பேச முயற்சிக்கும்போதும் நுரையீரலில் இருந்து காற்று வெளியேறுகிறது.
இந்தக் காற்று நீரின் மேற்பரப்பில் படும்போது, நுட்பமான அலைகளை உருவாக்குகிறது. இந்த சென்சார், நீரின் மேற்பரப்பில் ஏற்படும் இந்த அலைகளைக் கண்டறிந்து, கேட்கக்கூடிய குரலைச் சார்ந்து இல்லாமல் பேச்சு சமிக்ஞைகளை விளக்குகிறது.
இதன்மூலம் குரல் அங்கீகாரத்திற்கு ஒரு புதிய வழியை உருவாக்குகிறது. "வாயிலிருந்து வெளியேறும் காற்றால் காற்று-நீர் இடைமுகத்தில் உருவாகும் நீர் அலைகளை கண்காணித்து குரலை அங்கீகரிக்கும் இந்த சென்சார், அரிய வடிவமைப்புகளில் ஒன்றாகும்".
இந்த ஆய்வு Advanced Functional Materials இதழில் வெளியாகியுள்ளது.இந்த சென்சார், மின்சாரம் கடத்தும், ரசாயனப் பண்புகள் கொண்ட நுண்ணிய பொறி பஞ்சு மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.
காற்று-நீர் இடைமுகத்திற்கு சற்று கீழே வைக்கப்படும்போது, இது வெளியேறும் காற்றால் ஏற்படும் நுட்பமான அசைவுகளைப் பிடித்து, அவற்றை மின் சமிக்ஞைகளாக மாற்றுகிறது.
இந்த நுட்பமான சமிக்ஞைகளை துல்லியமாக அடையாளம் காண, ஆராய்ச்சிக் குழு கன்வல்யூஷனல் நியூரல் நெட்வொர்க்குகள் - CNN (Convolutional Neural Networks - CNN) என்ற ஆழ்நிலைக் கற்றல் மாதிரியைப் பயன்படுத்தியது. இந்த அமைப்பு, பயனர்கள் சத்தம் எழுப்பாமல், ஒரு குறிப்பிட்ட தூரத்திலிருந்து சாதனங்களுடன் தொடர்பு கொள்ள உதவுகிறது.
"ஆய்வக மாதிரி அளவில், இந்த சாதனத்தின் உற்பத்தி செலவு சுமார் ரூ. 3,000 ஆகும்," என்று ஆராய்ச்சிக் குழு கூறியது. இந்த தொழில்நுட்பத்தை நிஜ உலகப் பயன்பாட்டிற்குக் கொண்டுவர தொழில் கூட்டாண்மைகளை ஆராய்ந்து வருவதாகவும், இது செலவைக் குறைக்க உதவும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்த சென்சாரின் முக்கிய அம்சங்கள்:
குரல் குறைபாடுள்ளவர்களுக்கு தொடர்பற்ற தகவல்தொடர்பு.
CNN மூலம் AI-ஆல் இயக்கப்படும் சமிக்ஞை விளக்கம்.
ஸ்மார்ட் சாதனங்களை தொடர்பற்ற முறையில் கட்டுப்படுத்துதல்.
குரல் அங்கீகாரத்திற்கு அப்பால், இந்த சென்சார் உடற்பயிற்சி கண்காணிப்பு, அசைவு கண்டறிதல் மற்றும் நீருக்கடியில் உணர்தல் மற்றும் தகவல்தொடர்பு பயன்பாடுகளுக்கும் பயன்படுத்தப்படலாம்.
நீண்ட நேரம் நீருக்கடியில் பயன்படுத்திய பிறகும் இது நிலையாக இருப்பதால், நீருக்கடியில் செய்யப்படும் பல்வேறு சோதனைகளில் பயன்படுத்துவதற்கு இது உகந்ததாக உள்ளது.