தமிழ்நாடு காங்கிரசுக்கு புதிய தலைவர்?

தமிழ்நாடு காங்கிரசுக்கு புதிய தலைவர்?
Published on

மிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராக செல்வப்பெருந்தகை தேர்வு செய்யப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் பல்வேறு மாற்றங்களை தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டின் காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவரை மாற்றுவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

தற்போது காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருக்கக்கூடிய கே.எஸ்.அழகிரி 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இந்தப் பொறுப்பில் செயல்பட்டு வருகிறார். இவர் தலைவராக செயல்பட்ட காலகட்டத்தில் நடைபெற்ற நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட இடங்களில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றது. மேலும், காங்கிரஸ் கட்சியில் இருக்கக்கூடிய கோஷ்டி மோதல்களை ஓரளவு அனுசரித்துச் சென்றதால் காங்கிரஸ் கட்சி தலைமை கடந்த ஐந்து ஆண்டுகளாக இவரை தலைவராக செயல்பட அனுமதி வழங்கியது.

இந்த நிலையில், 2024ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளை தீவிரப்படும் முயற்சியின் ஒரு பகுதியாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவராக உள்ள செல்வப்பெருந்தகையை மாநில காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யலாம் என்று காங்கிரஸ் தலைமை முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இது தொடர்பான ஆலோசனை கூட்டம் டெல்லியில் ஜூன் மாதமே நடைபெற்றது.

மேலும், தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை கைப்பற்ற செல்வப்பெருந்தகை, ஜோதிமணி மற்றும் மாணிக்கம் தாகூர் ஆகியோர்களின் பெயர்கள் முன்னணியில் இருப்பதாகவும் ஆனாலும் செல்வப்பெருந்தகைக்கே அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த அறிவிப்பு நாளைக்குள் வெளியாகலாம் என்றும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது செல்வப்பெருந்தகை வகிக்கக்கூடிய சட்டமன்ற குழு தலைவர் பொறுப்பு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான இவிகேஎஸ். இளங்கோவனுக்கு வழங்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. இவர் சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு சட்டமன்றத்திற்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் சட்டமன்ற உறுப்பினராக ஆனது முதலே இவருக்கு சட்டமன்ற குழு தலைவர் பொறுப்பு வழங்கப்படலாம் என்று பேசப்பட்டு வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com