புதிய நாடாளுமன்றமே தேவையில்லை: பீகார் முதல்வர் நிதிஷ்குமார் !
பெரும்பாலான எதிர்க்கட்சிகள் திறப்பு விழாவை புறக்கணித்துள்ள நிலையில், புதிய நாடாளுமன்றமே தேவையில்லை என்கிறார் பீகார் முதல்வர் நிதிஷ்குமார். புதிய நாடாளுமன்ற வளாகம் என்பது சுதந்திர போராட்டத்துக்கு பங்களிக்காதவர்களின் வரலாற்றை மறைக்கும் முயற்சியாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாட்னாவில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், புதிய நாடாளுமன்ற வளாக திறப்பு விழாவுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு மற்றும் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் இருவரையும் அழைக்காதது குறித்து அதிர்ச்சியையும் கண்டனத்தையும் அவர் வெளியிட்டார்.
ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் மூத்த தலைவரான நிதிஷ்குமார், புதிய நாடாளுமன்ற வளாக திறப்பு விழாவை புறக்கணிப்பதுடன், தமது கட்சியினர் அன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவர் என்றும் தெரிவித்தார்.
புதிய நாடாளுமன்ற வளாகம் என்பது தேவையில்லாத ஒன்று. சுதந்திர போராட்டத்துக்கு பங்களிக்காதவர்கள் வரலாற்றை மாற்றி எழுத முயற்சிக்கின்றனர். குடியரசுத் தலைவரையும், துணை குடியரசுத் தலைவரையும் அழைக்காமல் பிரதமர் திறந்து வைப்பது ஆச்சரியம் அளிக்கிறது என்று வாஜபேயி அரசின் மத்திய அமைச்சராக இருந்த நிதிஷ்குமார் கூறினார்.
நாட்டின் நாடாளுமன்ற ஜனநாயக நடைமுறையில் குடியரசுத் தலைவருக்கு முக்கிய பங்கு உள்ளது. குடியரசுத் தலைவர் என்ற முறையில் திரெளபதி முர்மு, நாட்டின் அரசியலமைப்பில் உயரிய பதவி வகிக்கிறார். அவரைத்தான் பிரதமர் மோடி அழைத்து புதிய நாடாளுமன்ற வளாகத்தை திறக்கச் செய்திருக்க வேண்டும் என்று ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மாநிலத் தலைவர் உமேஷ் சிங் குஷ்வாஹா கூறினார்.
நிதிஆயோக் கூட்டத்தில் பங்கேற்காமல் இருப்பது குறித்து நிதிஷ்குமாரிடம் கேட்டதற்கு, “பாட்னாவில் எனக்கு முக்கிய வேலை இருந்ததால் அக்கூட்டத்தில் கலந்துகொள்ள தில்லி செல்ல முடியவில்லை. அந்த கூட்டம் காலையில் நடப்பதற்கு பதில் மாலையில் நடந்திருந்தால் கலந்துகொண்டிருப்பேன். மேலும் எனக்கு பதிலாக வேறு அமைச்சர் கலந்து கொள்வார் என்று கூறி பட்டியல் அனுப்பியிருந்தேன். அதற்கும் பதில் இல்லை. எனவே யாரும் இதில் பங்கேற்கவில்லை” என்றார்.
வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதிக்குப் பிறகு புழக்கத்திலுள்ள ரூ.2,000 நோட்டுக்களை வாபஸ் பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளதே என்று கேட்டதற்கு, முதலில் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெற்றார்கள். இப்போது ரூ.2,000 நோட்டுக்களையும் வாபஸ் பெறுகிறார்கள். உண்மையில் அவர்கள் நோக்கம்தான் என்ன என்பது புரியவில்லை என்றார் நிதிஷ்குமார்.