

சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்காக அமைக்கப்படும் புதிய கார் பிக்-அப் பாயின்ட், வரும் டிசம்பர் மாதத்தில் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய பிளாசா திறக்கப்பட்டால், பயணிகள் விமான நிலையத்திற்கு அருகிலேயே டாக்ஸிகளை எளிதாகப் பிடித்துச் செல்ல முடியும். இந்தத் திட்டம் 2023-ல் தொடங்கப்பட்டது. அக்டோபர் 2024-ல் பயன்பாட்டிற்கு வரும் என பொதுமக்களால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திட்டமிட்டபடி பணிகள் மும்முரமாக நடைபெறாததால், பலமுறை காலக்கெடு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது, இந்த வசதி டிசம்பர் மாதத்தில் பொதுமக்களுக்கு கிடைக்கும் எனத் தெரிகிறது.
இந்தத் திட்டம் முதலில் அக்டோபர் 2024-ல் முடிவடையும் என்று கூறப்பட்டிருந்தது.ஆனால், பல்வேறு காரணங்களால் இத்திட்டத்தில் தாமதம் ஏற்பட்டு வந்தது.இதன் காரணமாக விமானத்தில் நீண்ட நேரம் பயணம் செய்தப் பிறகு, களைப்புடன் வரும் வெளியே வரும் பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு வாடகைக் காரைப் பிடித்து செல்வதில் சிக்கல்கள் நீடித்து வருகின்றன. பயணிகள் நீண்ட தூரம் நடக்க வேண்டியோ அல்லது சிறு வாகனங்களில் செல்ல வேண்டியுள்ளது.
நீண்ட தூரம் நடப்பதும், சிறு வாகனங்களுக்காகக் காத்திருப்பதும் ஒருபுறம் இருக்க, கார் பார்க்கிங் வசதியில் உள்ள லிஃப்டுகளும் போதுமானதாக இல்லை. குறிப்பாக பயணிகள் அதிக எண்ணிக்கையில் வரும் நேரங்களில், லிஃப்ட்கள் பயணிகளின் தேவைக்கு போதுமானதாக இல்லை. தற்போது, விமான நிலையத்திலிருந்து வெளியே வரும் பயணிகள், டாக்ஸியைப் பிடிக்க பல அடுக்கு கார் பார்க்கிங் பகுதிக்கு தான் செல்ல வேண்டும். அங்கு செல்ல நீண்ட தூரம் நடக்க வேண்டும் முக்கியமாக மாற்றுத் திறனாளி பயணிகளுக்கும், முதியோர்களுக்கும் இது பெரிய சவாலாக இருந்து வருகிறது. இந்த ஏற்பாடு பயணிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
விமான நிலைய ஆணையத்தின் (AAI) அதிகாரி ஒருவர் இது பற்றி கூறுகையில், கட்டுமானப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், புதிய பிளாசா ஏறத்தாழ பொதுமக்கள் பயன்பாட்டுகு தயாராகி விட்டதாகவும், தற்போதுள்ள கார் பார்க்கிங் ஒப்பந்ததாரருடன் சில சட்டரீதியான சிக்கல்கள் ஏற்படாமல் இருக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், அதன் பிறகு, போக்குவரத்து மாற்றங்களுக்கான சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறியுள்ளார்.
மேலும், டெல்லி AAI தலைமையகத்திடமிருந்து திறப்பு விழாவுக்கான தேதி உறுதி செய்யப்பட்டு இந்த புதிய பிக் அப் முனை டிசம்பர் மாதத்தில் உறுதியாகத் திறக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.எனவே,சென்னை விமானப்பயணிகள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
இதுபோன்ற ஒரு சிறிய திட்டம் கூட பொது மக்களின் பயன் பாட்டுக்கு வர ஒரு வருடம் தாமதமாவது வருத்தத்தை அளிக்கிறது. அதிகாரிகள் ஒரு காலக்கெடுவை அறிவிக்கும் போது, மக்கள் அதை நம்பி எதிர்பார்க்கிறார்கள். அதன்படி டிசம்பர் மாத இறுதியிலாவது இந்த பிளாசா திறக்கப்பட வேண்டும் என்பதே சென்னை விமானப்பயணிகளின் எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது