இந்தியாவில் அமேசான் பே, போன் பே, பேடிஎம், கூகுள் பே போன்ற பணப் பரிவர்த்தனை செயலிகளுக்கு பலவிதமான புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இனி ஒரு நாளைக்கு குறிப்பிட்ட முறைகள் மட்டும்தான் பயன்படுத்த முடியும்.
நாடு முழுவதும் இணையப் பரிவர்த்தனை எனப்படும் யுபிஐ பேமென்ட் சேவையானது, நாம் நினைத்துப் பார்க்காத வகையில் வளர்ச்சியடைந்துள்ளது. முக்கிய நகரங்கள் முதல் கிராமங்கள் வரை UPI சேவை தற்போது பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. சாலை ஓரங்களில் இருக்கும் கடைகளுக்கு போனாலும் சரி, மிகப்பெரிய வணிக வளாகங்கள், ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்குப் போனாலும் சரி, UPI பணப்பரிவாதனை தற்போது எல்லா இடத்திலும் இருக்கிறது. அதைப் பயன்படுத்தி எளிதாகப் பணப்பரிவர்த்தனை செய்யலாம்.
பணத்தேவை என்றால் முன்பு போல வங்கிகளுக்கும், ஏடிஎம் மையங்களுக்கும் ஓட வேண்டிய தேவை இல்லை. கையில் இருக்கும் பணத்திற்கு சில்லறை மாற்றுவதற்கு தவிக்க வேண்டிய அவசியமும் இல்லை. எல்லா மக்களும் UPI பேமென்ட் முறையைப் பயன்படுத்தத் தொடங்கி விட்டனர். எனவே இது தொடர்பான செயலிகளின் வளர்ச்சியானது அதிகரித்துவிட்டது. அமேசான் பே, பேடிஎம், போன் பே, போன்ற பணப் பரிவர்த்தனை செயலிகள் மக்களின் வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. இதைக் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்துவதால் அவ்வப்போது இதில் புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்படுகிறது.
எச்டிஎப்சி, ஆக்சிஸ், எஸ்பிஐ, ஐசிஐசிஐ, போன்ற நாட்டின் முக்கிய தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள், இணையப் பரிவர்த்தனையில் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்தக் கட்டுப்பாடுகள், போன் பே, கூகுள் பே, அமேசான் பே போன்ற செயலிகளைப் பயன்படுத்தி QR கோட் ஸ்கேன் செய்து பணம் செலுத்தும் முறைக்கு பிரச்சினையாக இருக்கும் என சொல்லப்படுகிறது.
புதிய கட்டுப்பாடுகளின் அடிப்படையில், இனி ஒரு வாடிக்கையாளர் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 1 லட்சம் மட்டுமே UPI மூலம் பணப்பரிவர்த்தனை செய்ய முடியும். இது ஒவ்வொரு வங்கியின் வாடிக்கையாளர்களின் லிமிட் எவ்வளவு கொடுக்கப்பட்டுள்ளதோ அதைப் பொறுத்து மாறும்.
மேலும், ஒரு நாளைக்கு 20 முறை மட்டுமே அதிகபட்சமாக UPI பணப்பரிமாற்றம் செய்ய முடியும். அதற்கு மேல் பணம் செலுத்த வேண்டும் என்றால், அடுத்த நாள் மட்டுமே செய்ய முடியும்.
குறிப்பாக, UPI பணப்பரிவர்த்தனை செய்யப் பயன்படுத்தும் ஒவ்வொரு செயலிகளிலும் நாள் ஒன்றுக்கு 10 முறை மட்டுமே பணப்பரிமாற்றம் செய்ய முடியும். இதில் QR கோடு ஸ்கேன் செய்து பணம் செலுத்துவதும் அடங்கும்.
இந்த முடிவால் யுபிஐ வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த புதிய விதிமுறைகள் விரைவில் அமலுக்கு வரும் என சொல்லப்படுகிறது.