இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள தன் கிளைகள் மூலம் பல்வகை வங்கிச்சேவைகளையும் அளித்து வருகிறது. 16000 கிளைகள் கொண்டுள்ள ஸ்டேட் வங்கிக் குழுமம் இந்தியாவிலேயே அதிகளவிலான கிளைகள் கொண்டுள்ள வங்கியாகும்.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா இப்போது, ரூ.25,000 முதல் ரூ.1 லட்சம் வரையிலான ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு ரூ.2 கட்டணமும், ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரையிலான பரிமாற்றங்களுக்கு ரூ.6 கட்டணமும், ரூ.2 முதல் 5 லட்சம் வரையிலான பணப் பரிமாற்றத்திற்கு ரூ.10 கட்டணமும் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி, தனது வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு தனது கட்டண அமைப்புகளில் புதிய திருத்தம் கொண்டு வந்துள்ளதாக அறிவித்துள்ளது. ஒருசில பரிவர்த்தனைகளுக்கான கட்டணங்களை வரும் நவம்பர் 1-ம் தேதி முதல் 'எஸ்.பி.ஐ. கார்ட்ஸ்' நிறுவனம் மாற்றியமைத்துள்ளதாக சமீபத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, கல்விக் கட்டணங்களை நேரடியாக பள்ளிகள், கல்லூரிகளுக்கு ஒருவரின் இணையதளங்கள் அல்லது 'பாய்ன்ட் ஆப் சேல்' இயந்திரங்களின் மூலம் கட்டினால், எந்த கூடுதல் கட்டணமும் கிடையாது என அறிவித்துள்ளது.
இதுவே, ஸ்டேட் வங்கியின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட்டை பயன்படுத்தி மூன்றாம் தரப்பு தளங்களான கிரெட், செக், மொபிகுவிக் போன்ற வங்கி சேவைகளை பயன்படுத்துவோருக்கு அந்த சேவைக்காக 1 சதவீதம் கூடுதலாக எஸ்.பி.ஐ. கார்டு கட்டணமாக வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி உங்கள் மொபைல் வாலட்டுகளுக்கு 1,000 ரூபாய்க்கு மேல் அனுப்பினால், இத்தகைய ஒவ்வொரு பரிமாற்றத்துக்கும் பரிவர்த்தனை தொகையில் இருந்து 1 சதவீதம் கட்டணமாக வசூலிக்கப்படும் என்றும் எஸ்பிஐ அறிவித்துள்ளது. இது அவ்வங்கியின் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை நேரடியாகப் பாதிக்கும்.
இந்தக் கட்டணங்கள் இதற்கு முன்பு இல்லை. அதேவேளை, இத்தகைய கட்டணம் வசூலிக்கப்படுவது, குறிப்பிட்ட சில வணிகர் குறியீடுகளின் கீழ் அடையாளம் காணப்பட்ட பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், இந்த விதிமுறை வரும் நவம்பர் மாதம் 1-ந்தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், தங்களது மொபைல் செயலிகளைப் பயன்படுத்தும்போது, அதனால் கூடுதல் கட்டணம் ஏதேனும் வசூலிக்கப்படுமா என்று தெரிந்துகொண்டு, பயன்படுத்துவதன் மூலம் கூடுதல் கட்டணம் செலுத்துவதில் இருந்து தப்பிக்கலாம்.